முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
தவெகவில் முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இஸ்லாமியர்களின் கட்சி ஒன்றை அழைத்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே உள்ள நிலையில், முஸ்லீம்களின் வாக்குகளை குறி வைக்கும் வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. வருகிற தேர்தலில் தவெகவுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் இஸ்லாமியர்களின் வாக்குகள், விஜய்க்கு செல்லுமா என கேள்வி எழுந்துள்ளது.
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா?
திராவிட கட்சிகளின் கோட்டையாக உள்ள தமிழ்நாட்டை கைப்பற்ற பல அரசியல் கட்சிகள், பல நேரங்களில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக, தங்களின் ரசிகர்களை நம்பி அரசியலில் நுழையும் நடிகர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
திமுக, அதிமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தியை பயன்படுத்தி அரசியலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பெற்றது. பின்னர், பல காரணங்களால் மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு இருந்த ஆதரவு குறைந்தது.
இந்த நிலையில், விஜயகாந்தின் அதே ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறார் தவெகவின் விஜய். ஆளுங்கட்சியை எதிர்த்து தீவிரமாக செய்லபடுவதன் மூலம் வாக்குகளை பெற முடியும் என விஜய் நம்புகிறார். ஒரு படி மேலே சென்று, திமுகவின் பலமான வாக்குவங்கியாக கருதப்படும் இஸ்லாமியர்களை குறிவைத்து விஜய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
திமுக கோட்டையில் ஓட்டை!
அதன் விளைவாக, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி, தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது வரும் தேர்தலில் விஜய்க்கு எந்த அளவுக்கு உதவும் என தெரியவில்லை. ஆனால், தவெகவில் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில், இஸ்லாமியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி ஒன்றை அழைத்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், மக்கள் தொகையில் 6 சதவிகிதம் இஸ்லாமியர்களாக உள்ளனர். திமுகவின் வெற்றிக்கு இவர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினரும் திமுகவுக்கே வாக்களித்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இம்மாதிரியான சூழலில், சிறுபான்மை வாக்குகளை குறிவைத்து தவெக அதிரடி காட்டி வருகிறது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி, பலமான வாக்குவங்கியை கொண்டிருக்கவில்லை என்றாலும் இஸ்லாமியர்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்ய அக்கட்சியின் ஆதரவு உதவும் என கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

