Crime: ராமேஸ்வரத்தில் கடலில் வீசப்பட்ட 32 கிலோ தங்கம்.. 2 நாட்கள் போராடி மீட்பு..! அதிர வைக்கும் பின்னணி..!
ராமேஸ்வரத்தில் கடலில் வீசப்பட்ட 32 கிலோ கடத்தல் தங்கம் நீச்சல் வீரர்களின் உதவியுடன் 2 நாட்கள் போராடி மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் கடத்தல் பொருட்கள் வான்வழி வழியாகவும், கடல்வழியாகவும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. இதைத்தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து தங்கம் அதிகளவில் இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைத்தடுப்பதற்காக விமான நிலையங்களிலும், கடலோரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 24 மணிநேரமும் இருந்து கொண்டு இருக்கிறது.
கடலில் வீசப்பட்ட தங்கம்:
இந்த நிலையில், இலங்கையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு படகு ஒன்று மூலம் தங்கக்கட்டிகள் ராமேஸ்வரம் வழியாக கடத்தப்பட இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்திய கடலோரக் காவல்படையினருடன் இணைந்து வேதாளை தென்கடல் பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, நடுக்கடலில் சந்தேகத்திற்குரிய வகையில் நாட்டுப்படகு ஒன்று தென்பட்டது. அந்த படகை சுற்றி வளைத்த அதிகாரிகள் படகில் இருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் வேதாளை பகுதியைச் சேர்ந்த முகமது நாசர், அப்துல் ஹமீது மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ரவிக்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் அவர்கள் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்திக் கொண்டு வந்ததும், போலீசாரை கடலோர காவல் படையை கண்டதும் தங்கக்கட்டிகளை கடலில் வீசியதும் தெரியவந்தது.
போராடி மீட்பு:
இதையடுத்து, கடலில் வீசப்பட்ட தங்கத்தை தேடும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்தினர். கடலில் வீசப்பட்ட தங்கம் சுமார் 32 கிலோ என்பதால் அதிகாரிகள் ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற வீரர்கள், நீச்சல் வீரர்கள் உள்பட பலரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
2 நாட்களாக இரவு, பகல் பாராமல் தேடுதல் வேட்டை நடந்தது, எக்மோ கருவி உள்ளிட்ட நவீன கருவிகளின் உதவியுடன் கடலில் தேடிய வீரர்கள் நேற்று பிற்பகல் கடலில் வீசப்பட்ட 32 கிலோ தங்கக்கட்டிகளையும் மீட்டனர். ஒரே பார்சலாக கடத்தல் தங்கம் இருந்ததால் அவர்கள் மொத்த தங்கத்தையும் மீட்டனர். மொத்த தங்கத்தின் எடை 32.869 கிலோ ஆகும். அதன் மொத்த மதிப்பு சுமார் 20.21 கோடி ஆகும். கடலில் வீசப்பட்ட தங்கத்தை 2 நாட்களாக தேடி அதிகாரிகள் கைப்பற்றியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 17.74 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Kalaignar 100: நெசவுக்கு 500 யூனிட் இலவசம்; உழவுக்கு முற்றிலும் இலவசம்.. கலைஞர் செய்தது என்னென்ன?
மேலும் படிக்க: TN CM Relief: சேலம் பட்டாசு குடோன் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ 3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..