"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
70 வயதில் தாத்தா என்றுதான் கூப்பிடுவார்கள் என்று மு.க.ஸ்டாலினை அமமுக பொதுச்செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் பொதுமக்கள் தன் மீது கொண்ட அன்பால் தன்னை அப்பா அப்பா என்று அழைக்கின்றனர் என்று கூறியிருந்தார். முதலமைச்சர் கூறியதை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர்.
70 வயசுல தாத்தாதான்:
இந்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் இன்று நிருபர்களுக்கு சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, தாத்தா என்று கூப்பிட வேண்டியவரை அப்பா என்று கூப்பிடுவார்கள்? 70 வயசுல தாத்தா என்றுதான் கூப்பிடுவார்கள். அவரை அப்பா என்று கூப்பிடுவதாக அவரே பேசிக்குறாரு. கெட் அவுட் டிம்கே என்றுதான் வரப்போகிறது. அதுதான் உண்மை. 2026 சட்டமன்ற தேர்தலில் கெட் அவுட் டிஎம்கே என்றுதான் வரும். அதை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ட்ரோல்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை பலரும் விமர்சித்த நிலையில், தற்போது தினகரனும் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி சிலர் இணையத்தில் முக ஸ்டாலின் அப்பா என்று கூறியதை ட்ரோல் செய்தனர்.
பாஜக கூட்டணியில் தினகரன்:
தமிழக அரசியலில் தினகரன் வந்தபோது அவரது வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 20 ரூபாய் டோக்கன் விவகாரம், தொகுதி மக்கள் அதிருப்தி உள்ளிட்ட பல காரணங்களால் அவர் அடுத்தடுத்த தேர்தல்களில் ஜொலிக்கவில்லை. தற்போது அமமுக பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்கிறது.
வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அமமுக கூட்டணி தொடருமா? அல்லது புதிய கூட்டணி உருவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களை கவர்வதற்காக அரசியல் கட்சியினர் புதுப்புது பிரச்சாரங்களை கையில் எடுத்து வருகின்றனர்.





















