Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆளில்லா ரயில்வே கேட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டிராக்டர் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆளில்லா இரயில்வே கேட்டை கடக்கமுயன்ற டிராக்டர் பெட்டி மீது இரயில் மோதிய விபத்தில் டிராக்டர் பெட்டி 200 மீட்டர் தூரத்திற்கு தூக்கி விசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆத்திப்பட்டு என்ற இடத்தில் ஆளில்லா இரயில்வே கேட் உள்ளது. இப்பகுதியை கடக்க வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் உளுந்தூர்பேட்டை தாலுகா ஈஸ்வரகண்ட நல்லூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவர் வைக்கோல் ஏற்றுவதற்காக தடையை மீறி டிராக்டரில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது டிராக்டரின் பின்பக்கம் இருந்த பெட்டி தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது.
உடனடியாக டிராக்டர் ஓட்டுநர் சக்தி டிராக்டரை மட்டும் அங்கிருந்து பிரித்து எடுத்துவிட்ட நிலையில் பெட்டி தண்டவாளத்திலேயே சிக்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில் தண்டவாளத்தில் சிக்கியிருந்த பெட்டியின் மீது மோதியது. இதில் பெட்டி 200 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் ரயில் இன்ஜினியின் முன்பகுதி சிறிய சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது இந்த விபத்து காரணமாக வைகை மற்றும் குருவார் ரயில்கள் சென்னை செல்வதில் ஒரு மணி நேர தாமதம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து விழுப்புரம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

