Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி புது வரலாறு படைத்துள்ளார்.

Champions Trophy 2025 IND vs PAK: இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமாவர் விராட் கோலி. இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 14 ஆயிரம் ரன்களை எட்டினார். இந்த போட்டிக்கு முன்னதாக அவர் 15 ரன்கள் எடுத்திருந்தால் இந்த சாதனையை படைக்கலாம் என்று இருந்தது. இன்றைய போட்டியில் ஹாரிஷ் ராஃப் பந்தில் அவர் பவுண்டரி அடித்து இந்த சாதனையை எட்டினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை எட்டிய 3வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர், சங்ககரா படைத்துள்ளனர். ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றையும் விராட் கோலி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி:
கிரிக்கெட் உலகின் அரசன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விராட் கோலி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்துள்ளார். இந்திய அணியின் பல போட்டிகளில் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த விராட் கோலி, இந்த தொடரில் களமிறங்கும் முன்பு பல சாதனைகளை படைக்கும் வாய்ப்புடன் களமிறங்கினார்.
இன்று துபாயில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் முன்பு 14 ஆயிரம் ரன்களை எட்டும் வாய்ப்பை அடைய விராட் கோலிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டிருந்தது. அவர் ஹாரிஷ் ராஃப் பந்தில் 14 ரன்களில் இருந்தபோது பவுண்டரி அடித்து இந்த சாதனையை படைத்தார்.
14 ஆயிரம் ரன்கள்:
சர்வதேச ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் 14 ஆயிரம் ரன்களை எட்டிய 2வது இந்தியர் மற்றும் தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களில் இவர் ஒருவர் மட்டுமே 14 ஆயிரம் ரன்களை எட்டிய ஒரே வீரரும் ஆவார். 36 வயதான விராட் கோலி இதுவரை 299 ஒருநாள் போட்டிகளில் 287 இன்னிங்ஸ்களில் ஆடி 14 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதில் 50 சதங்களும், 73 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 183 ரன்களை ஒருநாள் போட்டியில் விளாசியுள்ளார்.
50 சதங்கள்:
மேலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி கடந்த 2023ம் ஆண்டு முறியடித்தார்.
விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 123 போட்டிகளில் 210 இன்னிங்ஸ்களில் ஆடி 9 ஆயிரத்து 230 ரன்களை எடுத்துள்ளார். அதில் 30 சதங்களும், 7 இரட்டை சதங்களும், 31 அரைசதங்களும் அடங்கும். 125 டி20 போட்டிகளில் 1 சதம், 38 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 188 ரன்களை எடுத்துள்ளார்.




















