ஊரடங்கில் கஞ்சா ‛டோர் டெலிவரி’ செய்ய முயன்ற சகோதரர்கள் கைது
ஊரடங்கில் வீட்டில் முடங்கியோருக்கு கஞ்சா டோர்டெலிவரி செய்ய முயன்ற சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பழனி அருகே விருப்பாச்சியில் கஞ்சா கடத்திய இருவர் கைது. 3 பேர் தப்பியோட்டம். 70 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த விருப்பாட்சி கிராமத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக சத்திரப்பட்டி போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸார் ரோந்து மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீஸார் சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் 70 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.
போலீஸாரை பார்த்தும் காரில் வந்த மூவர் பயந்து தப்பி ஓடியுள்ளனர். மேலும் காரில் இருந்த இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் இருவரும் ஒட்டன்சத்திரம் தாலுகா தும்மிச்சம்பட்டியை சேர்ந்த பெருமாள் கார்த்தி(33), சரவணன்(48) என்ற சகோதரர்கள் என தெரியவந்தது. தப்பி ஓடிய ஜேசுதாஸ், ராமசாமி, சசிகுமார் ஆகியோரை தேடிவருகின்றனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மற்றும் மூன்று இருசக்கர வாகனம், 70 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், ‛தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு போதை வஸ்துகள் தேவை அதிகரித்துள்ளதாகவும், வீட்டில் முடங்கியிருப்போர் அதிக அளவில் கஞ்சா கேட்டதால் அவர்களுக்கு வீடுகளில் சப்ளை செய்ய எடுத்துச் சென்றதாகவும்,’ கூறியுள்ளனர். இந்நிலையில் கஞ்சா கடத்தி வந்தவர்களை கைது செய்து சிறப்பாக பணியாற்றிய சத்திரப்பட்டி போலீசாருக்கு பழனி காவல் சரக டிஎஸ்பி. சிவா சன்மானம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.