டாஸ்மாக் ஊழியர்களுக்கு ₹2,000 ஊதிய உயர்வு: அதிரடி மாற்றம்! யாருக்குக் கிடைத்தது? முழு விபரம் இதோ!
மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு

மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்க, டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் சுமார் 23,629 ஊழியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஏப்ரல் 1, 2025 முதல் மாதம் ₹2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த ஊதிய உயர்வுக்காக ஆண்டுக்கு ₹64.08 கோடி கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு கடந்த ஏப்ரல் 24, 2025 அன்று நடைபெற்ற டாஸ்மாக் நிர்வாகக் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கும் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 கடைகள் வாயிலாக, மதுபானங்களை விற்கிறது. இவற்றில் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் என, 23,500 பேர் பணிபுரிகின்றனர். அனைவருக்கும் இந்தாண்டு ஏப்ரல் முதல் தலா, 2,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என, துறையின் அமைச்சர் ஏப்ரலில் அறிவித்தார்.
மொத்தம், 2,000 ரூபாயில், 1,000 ரூபாயை அனைவருக்கும் ஊதிய உயர்வாகவும், 1,000 ரூபாயை ஊழியர் செயல்பாட்டை பொறுத்து ஊக்கத் தொகையாகவும் வழங்க, அரசு முடிவு செய்தது. இதற்கு, ஊழியர்களிடம் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில், 2024 - 25ல் மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயம் செய்திருந்த விலையை விட கூடுதலாக, 10 ரூபாய்க்கு மேல் விற்ற 197 மேற்பார்வையாளர், 234 விற்பனையாளர், 20 உதவி விற்பனையாளர் என மொத்தம், 451 ஊழியர்களுக்கு, 1,000 ரூபாயும், மற்ற அனைவருக்கும், 2,000 ரூபாயும் ஊதிய உயர்வு வழங்கி டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு, ஏப்., முதல் இம்மாதம் வரை கணக்கிடப்பட்டு, சில தினங்களில் ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.





















