Crime: கல்யாணத்துக்கு பிறகும் ஜீன்ஸ் பேன்டா? மனைவியிடம் சண்டையிட்ட கணவன் மர்ம மரணம்!
கணவன் -மனைவி இடையே அடிக்கடி சண்டை காரணமாக சந்தேகமான முறையில் கணவர் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன்-மனைவி இடையே பல்வேறு விஷயங்களில் பிரச்னை ஏற்படுவது வழக்கம். அந்த பிரச்னை சில நேரங்களில் கொலை வரை சென்றுவிடுகிறது. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோலோன் துடு(18). இவருக்கும் 17 வயது பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி சிறிதாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கடந்த 12ஆம் தேதி அவருடைய மனைவி ஜீன்ஸ் உடை அணிந்து திருவிழா ஒன்றுக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.
அதன்பின்னர் அவர் வீட்டிற்கு வந்த போது கணவர் அந்தோலோன் துடு அவரை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது திருமணமாகிய பெண்கள் இதுபோன்ற உடைகளை அணிய கூடாது என்று கூறி கணவர் திட்டியுள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க:தருமபுரி: முதலில் திருப்பூர்.. பின்னர் ஓசூர்..! 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த இருவர்!
கடந்த 16ஆம் தேதி அந்தோலோன் துடு உயிரிழந்துள்ளார். அவருடைய உயிரிழப்பு தொடர்பாக கணவரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதில், “தங்களுடைய மகன் இறப்பில் மனைவிக்கு தொடர்பு உள்ளதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். அவர் என்னுடைய மகனை கொலை செய்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் முதற்கட்ட விசாரணையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்தோலோன் துடு அதிகமாக மது அருந்தியுள்ளது தெரியவந்துள்ளது. அதன்பின்னர் அவர் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. எனினும் அவருடைய உடலை பிரேத பரிசோதனை செயத பின்பு உண்மையான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி சில நாட்களில் தம்பதி இருவர் இடையே ஏற்பட்ட பிரச்னையில் கணவர் ஒருவர் மர்மமான நிலையில் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முறையாக காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று கணவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்