Trump Vs Musk: சொல்லுங்க..எலான தூக்கி வெளில வீசிடலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு...
எலான் மஸ்க்கை தூக்கி வெளியே வீசி விடலாம் என, அமைச்சரவை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாம் முறையாக பதவியேற்றபின், முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உறுப்பினர்களிடம், எலானை தூக்கி வெளியே வீசி விடலாம் என ட்ரம்ப் பேசியதால், அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். எதனால் ட்ரம்ப் அப்படி கூறினார்.? பார்க்கலாம்.
சர்ச்சையை ஏற்படுத்திய எலான் மஸ்க்கின் உத்தரவு
சமீபத்தில், அரசு அதிகாரிகளுக்கு சர்ச்சையான உத்தரவு ஒன்றை பிறப்பித்தார், அரசு திறன் மேம்பாட்டுத்துறை தலைவராக இருக்கும் எலான் மஸ்க். அவரது உத்தரவின்படி, அரசு ஊழியர்கள் அனைவரும், தங்களது கடந்த வார பணி குறித்தான ரிப்போர்ட்டை, அதாவது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதைக் கண்டு திகைத்துப்போன அரசு ஊழியர்கள் செய்வதறியாகது தவித்துவந்தனர்.
இதனிடையே, மீண்டும் ஒரு சர்ச்சையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் மஸ்க். அதன்படி, அறிக்கையை கேட்டு அனைவருக்கும் இமெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலளிக்காதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என அறிவித்தார். இதனால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இது ட்ரம்ப் அரசுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவா, அல்லது தன்னிச்சையாக மஸ்க் எடுத்த முடிவா என கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், மஸ்க்கின் இமெயிலை கண்டுகொள்ள வேண்டாம் என அதிபர் ட்ரம்ப் கூறியதால், சர்ச்சை மேலும் வலுத்தது.
அமைச்சரவை கூட்டத்தில் ட்ரம்ப் பேச்சால் பரபரப்பு
இப்படிப்பட்ட சூழலில், 2வது முறையாக ட்ரம்ப் அதிபர் பொறுப்பேற்ற நிலையில், முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமெரிக்க அரசுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்சேத் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும், அவர்களுக்கு பின்னால் எலான் மஸ்க் உள்ளிட்டோரும் அமர்ந்திருந்தனர்.
அப்போது உறுப்பினர்களை பார்த்து, எலான் மீது யாராவது அதிருப்தியாக இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். இதை கேட்ட அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டாலும், சிரித்து சமாளித்தனர். தொடர்ந்து பேசிய ட்ரம்ப், அப்படி அதிருப்தி இருந்தால் சொல்லுங்க, அவரை இங்கிருந்து தூக்கி வெளியே வீசிவிடலாம் என கூறியுள்ளார். அதைக் கேட்டு அனைவரும் சிரித்துக்கொண்டே பலமாக கையை தட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் கூட்டத்தில் பேசிய எலான் மஸ்க், ட்ரம்ப்பிடம் முன்கூட்டியே கேட்டுவிட்டுதான் அத்தகைய உத்தரவை பிறப்பித்ததாக விளக்கமளித்தார். இதை ட்ரம்ப்பும் ஆமோதித்துள்ளார்.
தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் ஊடகங்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட மஸ்க், ட்ரம்ப் ஒரு சிறந்த அமைச்சரவையை அமைத்துள்ளதாகவும், இதுவரை இதுபோன்ற திறமையான அணியை பார்த்ததில்லை எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
எப்படியோ ஐஸ் வைத்து, சர்ச்சையிலிருந்து தப்பியுள்ளார் எலான் மஸ்க்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

