Crime: சொத்து தகராறில் மருமகனை வெட்டிக்கொன்ற மாமனார் - தென்காசியில் பயங்கரம்
கையில் இருந்த அரிவாளால் வெட்டிவிட்டு இருவரும் தப்பியோடியுள்ளனர். இதில் அய்யாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணிபேரி புதூரை சேர்ந்தவர் அய்யாதுரை (45), இவருடைய மனைவி கலாவதி, இவர்களுக்கு சொந்தமான இடம் தலைவன்கோட்டை அருகே உள்ளது. இந்த நிலையில் கலாவதிக்கு சொந்தமான சொத்தை தனக்கு எழுதி தரும்படி கலாவதியின் சித்தப்பா சின்னபாண்டி (48) என்பவர் அய்யாதுரையிடம் கேட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அய்யாத்துரைக்கும், சின்னபாண்டிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று தலைவன்கோட்டை கண்மாய்க்கு அருகே அய்யாதுரை சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சின்னபாண்டி சொத்தை எழுதி தரும்படி மீண்டும் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சின்னபாண்டி அங்கு வந்த அவரது தம்பி அலங்காரபாண்டியுடன் சேர்ந்து அய்யாதுரையை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் கையில் இருந்த அரிவாளால் வெட்டிவிட்டு இருவரும் தப்பியோடியுள்ளனர். இதில் அய்யாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய சின்னபாண்டி மற்றும் அவரது தம்பி அலங்கார பாண்டியை தேடி வருகின்றனர். சொத்து தகராறு தொடர்பாக அய்யாதுரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்