தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உறுதி; நெருக்கும் அமித்ஷா- தலைவலியில் ஈபிஎஸ்!
உள்ளே அமித்ஷா கூட்டணி ஆட்சிதான் என அறிவிக்க வெளியே ஈபிஎஸ் அது எல்லாம் கிடையாது என அறிவித்தது அப்போதே சர்ச்சைக்குள்ளானது.

’’தேர்தலுக்காக மட்டும்தான் கூட்டணி’’ ‘’கூட்டணி ஆட்சி கிடையாது’’ என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், 2026ல் கூட்டணி ஆட்சி கன்ஃபார்ம் என அமித்ஷாவே பகிரங்கமாக அறிவித்துள்ளது அதிமுக பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியுடன் அதிமுக தேர்தலை சந்தித்தது. அதன் பின்னர் அப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஈபிஎஸ் அந்த கூட்டணியை முறித்துக்கொண்டார். பிறகு அதிமுகவும் பாஜகவும் எலியும் பூனையுமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமையுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
கறார் காட்டிய அண்ணாமலை
எடப்பாடியோ அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என கறார் காட்டி வந்தார். இதனையடுத்து அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து தூக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 11 அன்று காலையில் பாஜக தலைவர் அறிவிப்பு வெளியான நிலையில், சில மணி நேரங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக அதிமுக கூட்டணி அறிவிப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேடையில் எடப்பாடி பழனிச்சாமியுடன் கைக்கோர்த்து அமித்ஷா கூட்டணி குறித்து அறிவித்தார். அதிமுக பாஜக கூட்டணி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டணி ஆட்சி கிடையாது
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ், தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி..கூட்டணி ஆட்சி கிடையாது என தெரிவித்தார். உள்ளே அமித்ஷா கூட்டணி ஆட்சிதான் என அறிவிக்க வெளியே ஈபிஎஸ் அது எல்லாம் கிடையாது என அறிவித்தது அப்போதே சர்ச்சைக்குள்ளானது.
இதனையடுத்து அன்று நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷாவின் உரை ப்ர்ஸ் ரிலீஸாக பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘’வரும் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ அரசு ஆட்சி அமைக்கும் என அமித்ஷா கூறியுள்ளார். என்டிஏ கூட்டணியில் அதிமுக அங்கம் வகிப்பது, கூட்டணிக்கு மட்டுமில்லை அதிமுகவுக்கும் நன்மை பயக்கும். தொகுதி பங்கீடு மற்றும் அமைச்சர்கள் நியமனம் குறித்த முடிவுகள் தேர்தலுக்கு பிறகு எடுக்கப்படும்’’ என அமித்ஷா பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது வரை அதிமுக தலைவர்கள் கூட்டணி ஆட்சி அமையாது, அதிமுக ஆட்சிதான் என கூறி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மதுரை வந்த அமித்ஷா, மீண்டும் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறினார். அமித்ஷாவின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மழுப்பிய நயினார் நாகேந்திரன்
இதனையடுத்து இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ''2026ல் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அதற்கு இப்போது பதில் சொல்லமுடியாது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் ஈபிஎஸ் தலைமையில்தான் ஆட்சி. கூட்டணியில் ஆட்சி'' என மழுப்பலாக பதில் சொல்லியுள்ளார். இவ்வாறு கூட்டணி ஆட்சியா இல்லையா என்பதில் அதிமுக பாஜக இடையே குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், இதில் ஈபிஎஸின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.























