P Chidambaram on Fuel Price: பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு மத்திய அரசின் பேராசையே காரணம் : ப.சிதம்பரம் காட்டம்
10 அடி பள்ளத்தில் வீழ்ந்த பிறகு இரண்டு ஏறியதை ஏற்றம் என நாம் கருதுமுடியாது. 10 அடியை தாண்டி தரைக்கு வந்த பிறகுதான் ஏற்றம் என்பதை குறித்து நாம் பேச முடியும் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
பெட்ரோல் டீசல் விலையேற்றத்துக்கு மத்திய அரசின் பேராசையே காரணம். ஒரே பொருள் மீது அதிக வரி (33% மத்திய வரி) ஏற்றத்தை மத்திய அரசு விதிக்கிறது. இது தவறான வரிக்கைக்கொள்கை. இது வரி விதிப்பு அல்ல, இது மக்களை கசக்கிபிழியும் நடவடிக்கை. இந்த ஆண்டும் மட்டும் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி வசூல் மூலம் வசூலிக்கிறது. இது மறைமுகமாக பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை இந்திய ரிசர்வ் வங்கியும் குறிப்பிட்டிருக்கிறது. இந்த விலைகளை குறைக்க வேண்டும் என ஆர்பிஐ கூறிவருகிறது. ஆனால் மத்திய அரசு இதனை கவனத்தில் கொள்ளவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசி இருக்கிறார்.
தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தற்போதைய பொருளாதார நிலை குறித்து ப.சிதம்பரம் இவ்வாறு பேசி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இந்த பொருளாதாரம் குறித்து மேலும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
இந்திய பொருளாதாரம் குறித்து பார்ப்பதற்கு முன்பு சர்வதேச சூழலை பார்க்க வேண்டும். சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி சுணங்கி இருக்கிறது. ஒவ்வொரு நாடும் தற்சார்பு என்னும் கொள்கையை கடைபிடிக்க தொடங்கி இருப்பதால் வளர்ச்சி குறைந்திருக்கிறது. சர்வதேச வளர்ச்சி 3 சதவீதம் என்னும் அளவில்தான் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இதனை சார்ந்தே இந்தியாவின் வளர்ச்சி இருக்கும். சர்வதேச சூழலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை என கூற முடியாது.
2004 முதல் 2014-ம் ஆண்டு வரை முதல் சில ஆண்டுகள் 9 சதவீத வளர்ச்சி கூட எட்டியிருந்தோம். அப்போது சர்வதேச வளர்ச்சியும் அதிகமாக இருந்தது. சர்வதேச அளவில் வர்த்தகமும் நன்றாக இருந்தது. வர்த்தகம் நன்றாக இருந்தால் தேவை உயரும். அதனால் உற்பத்தி அதிகரிக்கும், அப்படியானால் முதலீடு வரும். ஆனால் சர்வதேச அளவில் வர்த்தகம் குறைந்திருக்கிறது. இதுதான் சர்வதேச சூழல்.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தால், சாதாரண மக்கள் மற்ற செலவுகளுக்கு செய்யும் செலவு குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. மேலும் வங்கி சேமிப்பு குறைந்திருக்கிறது, வீடுகளின் கடன் சுமை கூடி இருக்கிறது என பல எச்சரிக்கைகளை ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.
பங்குச்சந்தையில் ஏற்றம் இருக்கிறதே என்று கூறலாம். அந்நிய முதலீடு காரணமாக பங்குச்சந்தை ஏற்றம் அடைகிறது. எவ்வளவு வேகமாக வருகிறதோ அவ்வளவு வேகமாக வெளியேறுவதை பார்த்திருக்கிறோம். பங்குச்சந்தை 100 நிறுவனங்களின் நிலையைதான் பிரதிபலிக்கிறதே தவிர 100 சதவீத இந்தியர்களின் சூழலை பிரதிபலிக்கவில்லை.
வி ஷேப் ரெகவரி என்னும் ஏமாற்று
நிலைமை இப்படி இருக்க `வி ஷேப் ரெகவரி’ என்னும் வார்த்தை மத்திய அரசு தினமும் உபயோகித்து வருகிறது. இதனை சொல்வதற்கு எந்த புத்திசாலிதனமும் தேவையில்லை. காலாண்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீதம் என்னும் அளவில் இருந்து மைனஸ் 24 சதவிதம் என்னும் அளவுக்கு சரிந்தது. இதில் இருந்து சிறிது உயர்ந்தால் கூட வி ஷேப் ரெகவரி இருக்கும். இதில் என்ன சாதனை இருக்க முடியும்.
ஆனால் தற்போது இருப்பது கே ஷேப் ரெகவரிதான். அதாவது இந்தியாவில் 50 சதவீத மக்களின் வாழ்க்கை தரத்தில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் அதே நிலையில் இருக்கிறது. 5 -10 சதவீத மக்களுக்கு ஏற்றம் இருக்கிறது. ஆனால் 40 சதவித மக்களுக்கு சரிவு ஏற்பட்டிருக்கிறது. வேலை இல்லை, வருமான இழப்பு, அல்லது தேவைக்கே செலவு செய்ய முடியாத சூழல் என்னும் நிலையில் இருக்கிறார்கள். இதனால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவிட்டன.
ஏற்றத்தை எப்படி புரிந்துகொள்வது?
பல ஆண்டுகளுக்கு முன்பு நோ வேகன்ஸி போர்டு இருக்கும். ஆனால் இன்று பல சிறு நிறுவனங்கள் தொழிலிலே இல்லை. இந்த நிலையில் இந்திய பொருளாதாரம் மீண்டு விட்டது என்பதை எப்படி புரிந்துகொள்வது.
உதாரணத்துக்கு 2004-ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 32 லட்சம் கோடி ரூபாய். நாங்கள் ஆட்சியை முடிக்கும்போது (2014) 105 லட்சம் கோடி என்னும் அளவில் இருந்தது.
அடுத்து ஆறு நிதி ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 105 லட்சம் கோடி இருந்து 145 லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. கோவிட் காலத்தில் 2020-21 –ம் நிதி ஆண்டில் ரூ.145 லட்சம் கோடியில் இருந்து 7 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறோம்.
இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு இந்த நிலையை தாண்டிதான் வளர்ச்சி என்பதை நாம் உணர முடியும். ஆனால் நடப்பு நிதி ஆண்டில் கூட இந்த எல்லையை நாம் தாண்டுவோமா என்பது தெரியவில்லை. காரணம் ஒவ்வொரு துறையும் 2018-ம் ஆண்டு நிலையிலே உள்ளன. விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் துறை மட்டுமே ஓரளவுக்கு வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. கட்டுமான துறை ஓரளவுக்கு மீண்டு வருகிறது.
10 அடி பள்ளத்தில் வீழ்ந்த பிறகு இரண்டு ஏறியதை ஏற்றம் என நாம் கருதுமுடியாது. 10 அடியை தாண்டி தரைக்கு வந்த பிறகுதான் ஏற்றம் என்பதை குறித்து நாம் பேச முடியும் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்