Savukku Shankar : ”தேச விரோதியா சவுக்கு?” அரசுக்கு சரமாரி கேள்வி! நீதிமன்றம் அதிரடி
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய காரணம் என்ன? அவரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை, கோயம்புத்தூர் காவல்நிலையங்களில் அவர் மீது மேலும் சில வழக்குகள் பதிவாகின. அடுத்தடுத்த புகார்களை தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அப்போதைய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததால் அடுத்தகட்டமாக உச்சநீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கரின் பேச்சு மற்றும் செயல் மன்னிக்க முடியாதுதான் என்று தெரிவித்தது. ஆனால் குண்டர் சட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்தது ஏன் என்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் அவர் நடந்து கொண்டாரா என்றும் தமிழக அரசை நோக்கி கேள்விகளை அடுக்கியது. அவரை இடைக்கால ஜாமினில் ஏன் விடுவிக்க கூடாது என்றும் கேட்டது.
சவுக்கு சங்கரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், குண்டாஸ் தொடர்பான சவுக்கு சங்கரின் தாயார் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.