TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்
பல லட்சம் கோடி கடனுக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மூலம் புதிய எம்.பிக்கள் அவசியமா? என பாஜகவை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதில் மத்திய பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள தொகுதிகள் குறைக்கப்பட்டு அவற்றின் பிரதிநிதித்துவம் குறையும் என்பது தமிழ் நாடு அரசின் நிலைபாடாக இருக்கிறது. இச்சூழலில் தான் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தவெக தலைவர் விஜய் மத்திய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஏற்கெனவே பல லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில் கூடுதலாக வரும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பளம், குடியிருப்பு மற்றும் இதர வசதிகளுக்குச் செலவிடப்படும் மக்கள் வரிப்பணம் அவசியம் தானா? இன்றைய Digital மற்றும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களிடம் இன்னும் திறம்படத் தொடர்பில் இருப்பதே சாலச் சிறந்த அணுகுமுறையாக அமையும். ஜனநாயகத்தைக் காக்க எந்த ஒரு செலவும் பெரிய செலவு அல்ல என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் அந்தச் செலவுகள் அவசியமானதாக இருக்க வேண்டும்.
எனவே நம் அரசியல் சாசனத்தின் பிரிவுகளைத் தக்கவாறு திருத்தி அமைத்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இன்றி அது காலவரையின்றி நீட்டிப்பு செய்யப்பட வேண்டும்.
அமெரிக்காவில் மக்களவைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 435 என நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. "Equal population representation from each MP என்ற கோட்பாடு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு 50 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இனியும் நீடித்தால் எந்த ஒரு பெரிய தீமையும் நிகழ்ந்துவிடப் போவதில்லை; இதுதான் இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முக்கியக் காரணம் என்பதும் இல்லை” என்று கூறியுள்ளார் தவெக தலைவர் விஜய்.





















