Nainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!
பாஜகவின் இரண்டு முக்கிய தலைகளை தவெக தலைவர் விஜய் தட்டித்தூக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் குஷ்பூ அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க தவெக முயற்சி செய்து வருகிறது. முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் இருவருக்கும் அண்மைக் காலமாகவே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. பாஜகவின் அடுத்த தலைவராக தன்னை நியமிக்க வேண்டும் என்று டெல்லி தலைமைக்கு தொடர்ந்து நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அது நிராகரிக்கப்பட்டு மீண்டும் பாஜக தலைவராக அண்ணாமலையையே அறிவிக்க இருக்கிறதாம் பாஜக.
அதைப்போல் பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்தே சீனியருக்கான மரியதையை அவர் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கும் சூழலில் மீண்டும் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் செயல்பட நயினார் நாகேந்திரன் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் அவரை இணைப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் நயினார் நாகேந்திரனுக்கு தூது விட்டனர். ஆனால் அவர் அதிமுகவில் இணைய விருப்பம் இல்லை என்று தெரிவித்தாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தான் பாஜகவின் மீது கடும் அதிருப்தியில் நயினார் நாகேந்திரன் இருப்பதாகவும் இதனால் அக்கட்சியை விட்டு விலகி தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. தவெக புதிய கட்சி என்பதால் முக்கிய பொறுப்ப வழங்கப்படும் என்று விஜய் உறுதி அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் பாஜக நிர்வாகி குஷ்பூவும் அண்மைக்காலமாகவே பாஜக தலைமைக்கு எதிரான கருத்தையே முன்வைத்து வருகிறார். கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு தனக்கு அழைப்பு விடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் குஷ்பூ முன்வைத்தார். இச்சூழலில் தொடர்ந்து தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசி வரும் குஷ்பூ பாஜக வில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் தவெகவில் இணைந்த நிலையில் நயினார் நாகேந்திரன் மற்றும் குஷ்பூ தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது. மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் தவெகவில் இணையும் நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்கான தகவல் கட்சியின் சார்பில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.





















