Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்பு
ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவராகி உள்ள நிலையில், சில முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஆளுங்கட்சிக்கு செக் வைக்கும் வலையில் ராகுலுக்கு அதிகாரங்கள் இருக்கின்றன.
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார் ராகுல்காந்தி. எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற 54 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி 2014 தேர்தலில் 44 தொகுதிகளிலும், 2019 தேர்தலில் 52 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதனால் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கொடுக்கப்படாமல் இருந்தது. இந்த முறை 99 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி தலைவர் ஆகியுள்ளார் ராகுல்காந்தி.
இனி எதிர்க்கட்சி தலைவரை கலந்தாலோசிக்காமல் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு சிரமம் உள்ளது. 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் ஆட்சி செய்த பாஜகவுக்கு, இந்த முறை ராகுல்காந்தியுடன் ஆலோசனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யக் கூடிய மூன்று பேர் கொண்ட குழுவில் எதிர்க்கட்சி தலைவரும் இருப்பார். இதை தவிர்த்து பிரதமரும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கேபினட் அமைச்சரும் இருப்பர். இரண்டு நபர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், ராகுல்காந்தியின் கருத்தும் இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
அதேபோல் சிபிஐ, அமலாக்கத்துறை, விஜிலன்ஸ் கமிஷன் ஆகிய முக்கிய அமைப்புகளின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவிலும் எதிர்க்கட்சி தலைவர் உறுப்பினராக இருப்பார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை வைத்து மிரட்டுவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், தலைவர்களை தீர்மானிப்பதில் தற்போது அதிகாரம் கிடைத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
அதேபோல் கேபினட் அமைச்சருக்கான சம்பளம் மற்றும் சலுகைகளும் எதிர்க்கட்சி தலைவருக்கு கிடைக்கும். அதன்படி ராகுல்காந்திக்கு கிடைக்கும். அரசு பங்களாவும் எதிர்க்கட்சி தலைவருக்கு உண்டு. மேலும் மக்களவையில் முதல் வரிசையில் எதிர்க்கட்சி தலைவருக்கு இடம் இருக்கும்.
10 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் பாஜக தலைமையிலான அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வந்த நிலையில், இந்த முறை கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது பாஜகவுக்கு சவாலாக இருக்கும் என சொல்லப்பட்டது. தற்போது எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தியும் இருப்பதால் முக்கிய முடிவுகளை எடுப்பதில் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் என சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.