Salem Metro Train: சேலத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் எப்போது வரும் ? ஆய்வறிக்கை கூறுவது என்ன?
Salem Metro Rail Project: சேலம் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 5வது பெரிய மாநகராட்சியாக சேலம் உள்ளது. 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் சேலம் மாநகரில் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால், அனைத்து மாநிலங்களை இணைக்கும் முக்கிய நகரமாக திகழ்கிறது. சேலம் ஒரு தொன்மை வாய்ந்த நகரமாகவும், கதர், பட்டு வளர்ச்சி, வெள்ளி கொலுசு மற்றும் சேலம் இரும்பு ஆலை போன்ற தொழில் துறைகளில் முன்னோடியாக விளங்குகிறது.
சேலம் மெட்ரோ ரயில் திட்டம் பணி:
ஏற்காடு மற்றும் மேட்டூர் அணை ஆகியவை சேலம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. மேட்டூர், ஈரோடு, ஆத்தூர், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் மைய பகுதியாக அமைந்துள்ளதால் வெளியூர் மக்கள் அதிகமான வாகனங்கள் மூலம் தினசரி பயணிப்பதாலும் போக்குவரத்து நெரிசல்கள் மிகுந்த மாநகரமாக சேலம் உள்ளது. போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில், மெட்ரோ ரயில் இயக்க சாத்திய கூறுகள் உள்ளதா என சேலத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்:
இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் திருச்சி, நெல்லை, மதுரை, சேலத்தில் கடந்த ஆண்டு தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில், சேலத்தில் 2 வழித்தடத்தில் இயக்குவது குறித்து தனியார் நிறுனம் திட்ட அறிக்கை தயாரித்தது. இது தொடர்பாக மாநில அரசிடமும், மத்திய அரசிடமும் அறிக்கையை அளிக்கப்பட்டது. அதன்படி, மாநகர எல்லையான கருப்பூரில் தொடங்கி மாமாங்கம், ஜங்ஷன், சத்திரம், 4 கலெக்டர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், குகை, தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி வரையும் என மொத்தம் 18.03 கி.மீட்டர் தூரம் இயக்குவது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
எந்த பகுதிகளில் சேலம் மெட்ரோ ரயில்:
இதே போல், மற்றொரு வழித்தடமான உத்தமசோழபுரத்தில் தொடங்கி சந்தைபேட்டை, மணியனூர், சேலம் மார்க்கெட் ரயில் சந்திப்பு, கலெக்டர் அலுவலகம், சேலம் டவுன் ரயில் நிலையம், அக்ரஹாரம், அம்மாப்பேட்டை, உடையாப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையம் வரை 17.16 கி.மீட்டர் தூரம் இயக்குவது குறித்தும் கண்டறியப்பட்டது. இதனிடையே, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் குழு கோவை, திருச்சி, மதுரையில் மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக விரிவாக ஆலோசித்தது. இங்கு மெட்ரோ ரயில் பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு மத்திய அரசின் நிதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது.
அறிவிப்பு இல்லை:
ஆனால் சேலத்துக்கு மெட்ரோ ரயில் தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. திட்டம் அப்படியே நின்று விட்டது. சேலத்திலும் மெட்ரோ ரயில் விடுவது தொடர்பாக, மெட்ரோ நிர்வாகம் மீண்டும் குழு அமைத்து, ஆய்வு செய்ய வேண்டும். அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பில் உள்ளனர்.
மக்கள் கோரிக்கை:
சேலம் மாநகராட்சியில் கடந்த 2024 கணக்கெடுப்பின்படி 10 லட்சத்து 83 ஆயிரத்து 54 பேர் வசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உட்கட்டமைப்பையும் அரசு உயர்த்த வேண்டும். எனவே, சேலம் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.






















