Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால், வாடிய முகத்துடன் முதலமைச்சர் இல்லத்தை காலி செய்துள்ளார். தனது தந்தையின் கைகளை பிடித்து கொண்டு அவர் நடந்து செல்லும் காட்சிகளை ஆம் ஆத்மி கட்சியினர் உருக்கமுடன் பதிவிட்டு வருகின்றனர்.
புதிய மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் கைது திகார் சிறையில் அடைத்தது. ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக சொல்லி அதிரவைத்தார். மீண்டும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்றும் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். கெஜ்ரிவால் சிறையில் இருந்த போதும் கட்சியின் முக்கிய பொறுப்புகளை அவர்தான் கவனித்து வந்தார். இந்தநிலையில் டெல்லியின் முதலமைச்சராக இன்று அதிஷி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கெஜ்ரிவால் முதல்வர் இல்லத்தை காலி செய்துள்ளார். தனது தந்தையின் கைகளை பிடித்து கொண்டு அவர் வீட்டில் இருந்து வெளியேறும் காட்சிகள் ஆம் ஆத்மி கட்சியினருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. கெஜ்ரிவாலின் பாதுகாப்பில் கவலை உள்ளது. கடந்த காலங்களில் பல முறை தாக்கப்பட்டார். அவருக்கு வயதான பெற்றோர் மற்றும் குழந்தைகள் உள்ளனர் என ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சர் இருக்கைக்கு வருவார் என அக்கட்சியினர் அடித்து சொல்கின்றனர்.