Pawan kalyan salary : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?
நிதிநிலை மோசமாக இருப்பதால் எனக்கு சம்பளம் வேண்டாம் என சொல்லி அதிரடி காட்டியுள்ளார் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.
ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜகவை உள்ளடக்கிய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு 21 தொகுதிகளை ஒதுக்கினார் சந்திரபாபு நாயுடு. 21 தொகுதிகளிலும் வெற்றியை தட்டித் தூக்கிய பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்தது.
மேலும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராகவும் பவன் கல்யாணுக்கு பதவி கிடைத்துள்ளது. தனது துறையில் நிதி நெருக்கடி இருப்பதால் சில முக்கிய முடிவுகளை எடுத்து அதிரடி காட்டியுள்ளார் பவன் கல்யாண். மூன்று நாட்கள் சட்டசபையில் கலந்துகொள்வதற்கான சம்பளம் ரூ.35,000 தொடர்பான ஆவணங்களில் கையொப்பம் வாங்குவதற்காக அதிகாரிகள் வந்ததாகவும், ஆனால் அந்த சம்பளத்தை வாங்க மறுத்து விட்டதாகவும் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
அதேபோல் அலுவலகத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கும், புதிய பொருட்கள் வாங்குவதற்கும் கேட்ட போது கூட புதிதாக எதுவும் செய்ய வேண்டாம் என மறுத்துள்ளார் பவன் கல்யாண். பஞ்சாயத்து ராஜ் துறையில் போதுமான அளவு நிதி இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகவும், தனக்கு எந்த தேவையென்றாலும் சொந்த பணத்தை போட்டு செய்ய தயாராக இருப்பதாகவும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் ஆந்திர பிரதேசத்தில் நிதி நிலை மோசமாகி இருந்ததாகவும், அதனை சரிகட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாண் சம்பளத்தை வாங்க மறுத்த சம்பவம் பலராலும் பாராட்டப்படுகிறது.