Tamilisai Vs Annamalai | "அ.மலையை மாத்துங்க.."டெல்லிக்கு செல்லும் தமிழிசை? கமலாலயத்தில் சூறாவளி!
ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழா மேடையிலேயே, தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து அமித்ஷா கண்டித்த விவகாரம் தமிழக பாஜகவில் புயலை கிளப்பியுள்ள நிலையில், அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடியை தேசிய தலைமையிடம் உயர்த்த தமிழிசை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுக்க பிள்ளையார் சுளி போட்டதில் மிக முக்கியமானவர் தமிழிசை சவுந்தரராஜன். மாநில பாஜக தலைவராக இருந்து, பின்னர் தெலங்கானா மாநிலம் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியை வகித்து, அண்மையில் தேர்தல் அரசியலுக்காக தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் தமிழிசை உட்பட பாஜகவில் யாருமே தமிழ்நாட்டில் வெல்லவில்லை. அதற்கு காரணம், பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்த்து தான், சேர்ந்து இருந்தால் பல தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கலாம் என்று பாஜக சீனியர்கள் சிலர் நம்புகின்றனர். அப்படி பாஜக அதிமுக இடையே விரிசல் ஏற்பட்டு பிரிய காரணம் அண்ணாமலை தான் என்ற எண்ணமும் அவர்கள் மத்தியில் நிலவுகிறது.
அதன் ஒரு பகுதியாகவே நாடாளுமன்ற தோல்விக்கு பிறகு பேசுகையில், அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் 25 முதல் 35 இடங்களை வென்றிருக்கலாம் என அண்ணாமலையை நேரடியாக தாக்கினார். மேலும் பாஜக ஐ.டி விங் நிர்வாகிகள் சிலர் சொந்த கட்சி தலைவர்களையே விமர்சிப்பதாகவும், அதை இனி பொறுத்துகொள்ள முடியாது என்றும் எச்சரித்தார்.
இந்நிலையில் தான் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆகும் நிகழ்விற்காக டெல்லி சென்றிருந்த அண்ணாமலை, பி.எல் சந்தோஷிடம் இது குறித்து புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.
அது அமித்ஷா காதுகள் வரை எட்ட, ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவர், மேடையிலேயே கை விரலை அசைத்து தமிழிசையை அழைத்து, எச்சரிக்கை விடுக்கும் தோனியில் மிரட்டினார்..
உள்துறை அமைச்சர் அமித்ஷாவே இது போன்று எச்சரித்தால், தமிழக தலைவர்கள் அனைவருமே தற்போது சைலெண்ட் மோடுக்கு சென்றுள்ளனர்.
என்ன நடந்தது மேடையில் என்று தமிழிசை சவுந்தரராஜனும், வாய் திறக்காமல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு விமான நிலையத்திலிருந்து பறந்து விட்டார். அண்ணாமலையும் இனி கட்சி தலைமையின் உத்தரவோடு தான் செய்தியாளர் சந்திப்புகள் நடக்கும், பார்க்கும் இடத்தில் எல்லாம் பேச முடியாது, கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்திப்போம் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.
இந்நிலையில் தமிழக பாஜகவில் வீசும் புயலில் யார் தலை உருள போகிறது என்று தெரியாமல் அனைவருமே கப் சிப்பாக உள்ளனர்.
ஆனால் அமித்ஷாவின் இந்த செயல்பாட்டால் வழக்கமாக கலகலவென இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான மன உழைச்சலில் இருக்கிறாராம். பல தரப்பில் இருந்து பலர் தொலைப்பேசியில் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது, தன்னை நாட் ரீச்சபிலாகவே வைத்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் நெருங்கிய சிலர் தமிழிசையிடம் தமிழக பாஜகவில் நிலவும் பிரச்சனைகள், அண்ணாமலை குறித்து குற்றச்சாட்டுகள், தன்மீது அண்ணாமலை ஆதரவாளர்கள் வைக்கும் விமர்சனங்கள் ஆகியவற்றை டெல்லி தலைமைக்கு ஆதரங்களுடன் அனுப்பி வைக்குமாறு ஆலோசனை சொல்லியுள்ளனராம். அதனால் விரைவில் தமிழிசை சவுந்தரராஜனிடமிருந்து ஒரு புகார் கடிதம் பறக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லபடுகிறது.
அதே நேரம் அமித்ஷாவின் இந்த செயலை பலர் கண்டித்து வரும் நிலையில், நாடார் சங்கமும் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.