Vandalur Zoo: வண்டலூர் போற பிளான் இருக்கா ? - இதை கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க A to Z Details உள்ளே..!
Vandalur Zoo: காடுகளில் மான் மற்றும் சிங்கம் எப்படி சுதந்திரமாக உலா வருமோ அதுபோன்று இங்கு சிங்கம் மற்றும் மான்கள் சுதந்திரமாக உலா வருவதை பார்க்க முடியும்.
கோடை காலம் துவங்கி உள்ளது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், குழந்தைகளை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று விடுமுறை நாட்களில் இது போன்ற வெளியிடங்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் செல்வது குழந்தைகளுக்கு புத்துணர்வை தரும். இதனால் ஏபிபி நாடு சார்பில் சுற்றுலா தலங்கள் குறித்தும், நீங்கள் நேரில் பார்த்து ரசிக்கக்கூடிய இடங்கள் குறித்தும், தொடர்ந்து கட்டுரைகளில் வெளியிட்டு வருகிறோம். ஒவ்வொரு சுற்றுலா தலங்களுக்கும், நீங்கள் செல்லும் பொழுது, அதன் பட்ஜெட், முன் தயாரிப்புகள் என்ன என்று தெரியாமல் குழம்பி இருப்பீர்கள், அதற்கான தீர்வு தான் இந்த தொடர் Travel With ABP.
சென்னை புறநகர் முக்கிய சுற்றுலா தலம்
சென்னையில் இருப்பவருக்கும் சென்னை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊரை சார்ந்த பொதுமக்கள் ஒருநாள் இன்பமாக, அதுவும் பல்வேறு எக்ஸைட்டிங் அனுபவத்தை தரும் ஒரு இடமாக வண்டலூர் உயிரியல் பூங்காவை செல்லலாம். குறிப்பாக நேரடியாக பேருந்து வசதி கொண்ட, சுற்றுலா தலமாக இருப்பது கூடுதல் சிறப்பு அம்சம்.
கட்டணம் விவரம்
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம், பெரியோருக்கு 200 ரூபாய், குழந்தைகளுக்கு ( 5 முதல் 12 வயது வரை ) 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் இல்லை. நுழைவு கட்டணத்திலேயே செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
இது போக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் குழுவுடன் வரும்பொழுது, அவர்களுக்கு தலைக்கு இருபது ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. DSlR / SLR/ போன்ற கேமராக்களுக்கு கட்டணமாக 350 ரூபாயும், வீடியோ கேமராவுக்கு கட்டணமாக 750 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த நுழைவு கட்டணத்தின் மூலம் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் பார்க்கலாம். கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படுகிறது.
வசதிகள் என்னென்ன ?
பார்வையாளர்களுக்கு கழிப்பறை, தாய்ப்பால் ஊட்டும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகிய வசதிகள் இலவசமாக பூங்கா நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக கிடைப்பதால், நீங்கள் வீட்டில் இருந்து செல்லும் பொழுது, வாட்டர் கேன் கையில் கொண்டு செல்வது நல்லது. வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை சாப்பிட தனி இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளலாம். கோடை காலம் என்பதால் விலங்குகள் தண்ணீரில் ஆட்டம் போடும் அற்புத காட்சிகள், மதியம் 2 மணியிலிருந்து 4 மணி வரை யானை குளிக்கும் காட்சிகள் ஆகியவற்றை நேரில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பூங்கா சுற்றுவாகனம் ( பேட்டரி வண்டிகள் )
பூங்காவை சுற்றிப் பார்க்க பேட்டரி வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் பேட்டரி வண்டி மூலம் சென்று சுற்றி பார்த்து விட்டு வரலாம். இதற்காக பெரியவர்களுக்கு கட்டணமாக ரூபாய் 150, குழந்தைகளுக்கு 50 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. இதுபோக சைக்கிளில் கூட சென்று பூங்காவில் சுற்றிப் பார்க்கலாம், இது புதுவிதமான அனுபவத்தை நமக்கு கொடுக்கும். சைக்கிள் பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குழுவாக வரும் இளைஞர்கள் சைக்கிளில் சென்று சுற்றி பார்ப்பது ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும்.
முக்கியமான விஷயத்தை தெரிஞ்சுக்கங்க ?
பூங்காவில் சிங்கம் மற்றும் மான் ஆகிய சஃபாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காடுகளில் மான் மற்றும் சிங்கம் எப்படி சுதந்திரமாக உலா வருமோ அதுபோன்று இங்கு சிங்கம் மற்றும் மான்கள் சுதந்திரமாக உலா வருவதை பார்க்க முடியும். சஃபாரி மூலம் சிங்கம் மற்றும் மான் ஆகியவற்றை பார்க்க கட்டணம் பெரியவர்களுக்கு 150 ரூபாயும் சிறியவர்களுக்கு, 50 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. நேரடியாக விலங்குகளை பார்க்கும் அனுபவம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
உணவகங்கள் கட்டண விவரம்
உள்ளே தேவைக்கேற்ப உணவகங்கள், குளிர்பான கடைகள் ஆகியவை செயல்படுகின்றன. உணவுகள் தரமாக இருப்பதை பூங்கா நிர்வாகம் தினமும் உறுதி செய்து வருகிறது. உள்ளே தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் "அமுதகம் உணவகம்" செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சாம்பார் சாதம் 60 ரூபாய், தயிர் சாதம் 60 ரூபாய், வெஜ் பிரியாணி 80 ரூபாய், சைவ சாப்பாடு 130 ரூபாய், சிக்கன் பிரியாணி 180 ரூபாய், முட்டை பிரியாணி 140 ரூபாய், சிக்கன் பிரைடு ரைஸ் 150 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோக பல்வேறு வகையான சைவ மற்றும் அசைவ சைடிஷ்கள் கிடைக்கின்றன.
பார்க்கிங் கட்டணத்தை பத்தி தெரிஞ்சுக்கங்க ?
சைக்கிளில் வந்தால் பார்க்கிங் கட்டணம் கிடையாது, இரண்டு சக்கர வாகனங்களுக்கு 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆட்டோ ரிக்ஷாவிற்கு 50 ரூபாய், கார் / ஜீப் ஆகியவற்றிற்கு 150 ரூபாய், வேன்/ டெம்போ/ மினி பஸ் ஆகியவற்றுக்கு 170 ரூபாய், பேருந்துக்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.