Pichavaram Mangrove Forest: கோடைக்கு தயாராகும் பிச்சாவரம் அலையாத்தி வனப்பகுதி; மேம்பாட்டு பணிகள் தீவிரம்
Pichavaram Mangrove Forest: பிச்சாவரத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டம்; ரூ.10 கோடியில் மேம்பாட்டு பணிகள் துவங்கியது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிச்சாவரம் அலையாத்தி சதுப்பு நில வனப்பகுதி. இந்த வனப்பகுதி உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடுகள் ஆகும். இந்த வனம் இரண்டு முக்கியமான நதிகளின் முகத்துவாரமான வடக்கில் வெள்ளாறு சரணாலயத்திற்கும், தெற்கில் கொள்ளிட கரை ஓரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.
கடற்கரையை ஒட்டியுள்ள உப்பனாற்றில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 4 ஆயிரத்து 500 கால்வாய்களுடன் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. சுரபுன்னை மரங்களை கொண்ட இந்த காடுகள் மருத்துவ குணம் கொண்டவையாகும். ஒருபுறம் கடல், இன்னொருபுறம் பச்சைபசேல் என்று படர்ந்து காணப்படும் சுரபுன்னை மரங்கள் என இயற்கை எழில் மிகுந்து காணப்படும்.
இந்நிலையில் பிச்சாவரம் சுற்றுலா மையம் ரூ.10 கோடி மதிப்பில், மேம்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இங்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, படகு சவாரி செய்து, சதுப்புநில காடுகளை பார்வையிட்டுச் செல்கின்றனர். பிச்சாவரத்தில், கடந்த 1984ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், பிச்சாவரம் படகு குழாம் துவக்கப்பட்டது. தற்போது, படகு குழாமில் 15 மோட்டார் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு, ஆண்டுக்கு 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தை, முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. அதற்காக, 10 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, உணவகம், ஓய்வு அறை, பார்வையாளர்கள் கூடம், குழந்தைகள் விளையாட்டு கூடம், வாகன நிறுத்துமிடம், பார்வை கோபுரம், நடைப்பாதை, சுற்றுலா பயணிகள் உணவு அருந்தும் கூடம், பயணிகள் நிழற்குடை, டிக்கெட் கவுண்டர், நிர்வாக அலுவலகம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தற்போது, அடித்தளம் அமைப்பதற்காக (பைல்) போடும் பணி துவங்கி நடந்து வருகிறது. மேம்பாட்டு பணிகள் அடுத்த ஆறு மாதங்களில் முடிந்துவிடும் என, கூறப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் கோடைக்காலம் துவங்க உள்ளதால், பிச்சாவரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். ஏற்கனவே விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர். அவர்களுக்கு போதிய படகு வசதி இல்லாததால், வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்வர். எனவே, கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், படகு சவாரிக்கு கூடுதல் படகுகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

