லோ பட்ஜெட் மூணார் ட்ரிப் ப்ளான் பண்றீங்களா? ரூ.620 ரூபாய் போதும்.. சென்னை To மூணார் ..!
Chennai To Munnar: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, மூணாறுக்கு தினமும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது "

Chennai To Munnar Bus SETC: சென்னை மற்றும் மூணார் ஆகிய இரண்டு இடங்களிலும் இருந்தும் தமிழக அரசு பேருந்து தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.
மூணார் சுற்றுலா தளம் - Munnar Tourist Places
கொடைக்கானல் மற்றும் ஊட்டி அதன் பிறகு பலரும் செல்லக்கூடிய சுற்றுலா தலமாக கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு இருந்து வருகிறது. சமீப காலமாக கேரளா சுற்றுலாத் துறை சார்பில், மூணாறு சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மூணாறு கோடை காலம் மட்டுமில்லாமல் அனைத்து காலகட்டங்களிலும், சுற்றுலா செல்வதற்கு உகந்த காலமாக இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று அழைக்கக்கூடிய மூணாரில், தேயிலை தோட்டங்கள், வளைந்து செல்லும் மலைப்பாதைகள் ஆகியவை சிறப்பு வாய்ந்த இடங்களாக பார்க்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது கோடைகால சுற்றுலா தளமாக மூணார் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூணார் செல்வது எப்படி?
தமிழ்நாட்டில் இருந்து மூணார் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. உடுமலைப்பேட்டை வழியாக மூணார் செல்வது மற்றொன்று தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் பகுதியில் இருந்து மூணார் சென்றடைய முடியும். மூணாறுக்கு நேரடியாக ரயில் சேவை கிடையாது, எர்ணாகுளம் வரை சென்று அங்கிருந்து பேருந்தில் மூணார் செல்லலாம்.
சென்னையிலிருந்து மூணாறுக்கு மிகவும் குறைந்த விலையில் செல்ல, அரசு பேருந்து வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
சென்னை To மூணார் - Chennai To Munnar Bus Timing
சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மூணார் செல்வதற்கு நேரடியாக அரசு பேருந்து தினமும் சென்று வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் இந்த விரைவு பேருந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் மாலை 5:15 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை மூணார் பேருந்து நிலையத்திற்கு 7:15 மணியளவில் சென்றடைகிறது.
இருக்கை வசதி மற்றும் ஸ்லீப்பர் சீட் வசதி இந்த பேருந்தில் உள்ளன. இருக்கை வசதி டிக்கெட்டின், விலை 620 ரூபாயாகவும் ஸ்லீப்பர் டிக்கெட்டின் விலை 915 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு டோல் கேட், செங்கல்பட்டு பைபாஸ், மேல்மருவத்தூர் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இந்தப் பேருந்து பயணிகளை ஏற்றி செல்கிறது.
மூணார் To சென்னை- Munnar To Chennai Bus Timings
மூணாறில் இருந்தும் தினமும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் மூணாறில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு சென்று, காலை 6:30 மணி அளவில் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடைகிறது.
இந்தப் பேருந்துக்கு கட்டணம் இருக்கை வசதிக்கு 620 மற்றும் ஸ்லீப்பர் சீட்டுக்கு 915 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மூணார் செல்ல, மிக குறைந்த கட்டணமாகவே இந்தக் கட்டணம் பார்க்கப்படுகிறது.
டிக்கெட் புக் செய்வது எப்படி? - How To Book Munnar Bus Online
'லோ பட்ஜெட்டில்' மூணாறுக்கு சென்று வரவேண்டும் என ஆசைப்படுபவர்கள், நிச்சயம் இந்த பேருந்தில் சென்னையில் இருந்து மூணாறுக்கு சென்று வரலாம். தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். மூணாறில் இருக்கும் டபுள் டக்கர் பேருந்து நிலையம் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், குறைந்த விலையில் சென்று மூனாரை ரசித்து வரலாம்.