முத்தையா மகன் நடிக்கும் சுள்ளான் சேது.. மாணவன் கையில் அரிவாள்.. நெட்டிசன்கள் சரமாரி கேள்வி
இயக்குநர் முத்தையா மகன் நடித்திருக்கும் சுள்ளான் சேது படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் முத்தையா. கிராமப்புற மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி படங்களை இயக்குவதில் கவனத்தை ஈர்த்தவர் முத்தையா. இவரது இயக்கத்தில் வெளியான கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்கள் ஹிட் படங்களாக அமைந்துள்ளன. முத்தையா படங்களை பொறுத்தவரை அக்கா பாசம், அப்பா பாசம், மாமனுக்கும் மருமகனுக்குமான உறவுகளை பலப்படுத்துவது போன்று படங்களை இயக்குவார்.
முத்தையா மகன் ஹூரோ
இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியா காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம், விருமன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி வந்த முத்தையா, தனது மகனை நடிகராக்க ஆசைப்பட்டுள்ளார். விக்ரம், தனுஷ் ஆகியோர் நடித்த படங்களின் பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். முத்தையா மகன் விஜய் நடிக்கும் சுள்ளான் சேது என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பரத் வில்லனாக நடிக்கிறார்.
சுள்ளான் சேது பட போஸ்டர்
விஜய் முத்தையாவுக்கு ஜோடியாக நடிகை பிரிகிடா சகா நடிக்கிறார். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை கே கே ஆர் சினிமாஸ் எனும் பட நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் கே. கே. ரமேஷ் பாண்டியன் தயாரித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸூக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் போஸ்டரில் விஜய் முத்தையாவின் கையில் அருவாள் இருப்பது போன்று இருக்கிறது.
பட போஸ்டர் சர்ச்சை
பள்ளிக்கூடம் செல்லும் மாணவனின் கையில் அரிவாள் இருப்பது மாணவர்களை கெட்ட வழியில் செல்வதை ஊக்குவிப்பது போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பழமையில் இருந்து எப்போது முத்தையா மாறுவாரோ என்பது தான் அவர்களது கருத்தாக உள்ளது. பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்களும், அரிவாள் வெட்டு சம்பவமும் சமீபகாலமாக தென்மாவட்டங்களில் நடந்து வருவதை பார்த்து வருகிறோம். இயக்குநர் முத்தையாவும் அதைத்தான் வழிமொழிகிறாரோ என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.






















