ஈபிஎஸ் உடன் தங்கமணி... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி! குஷியில் அதிமுக தொண்டர்கள்
முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிருப்தி காரணமாக திமுகவில் இணையவுள்ளார் என்று தகவல் சர்ச்சை கிளம்பியிருந்த நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சுற்றுப்பயணத்தில் கலந்துக்கொண்டார்

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிருப்தி காரணமாக திமுகவில் இணையவுள்ளார் என்று சர்ச்சைய கிளம்பியிருந்த நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சுற்றுப்பயணத்தில் கலந்துக்கொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதிமுக-பாஜக கூட்டணி:
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்தது. இதனால் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதிமுக முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி மைத்ரேயன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர், இந்த லிஸ்டில் அடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பெயர் பெரிதும் அடிப்பட்டது. இதை ஒரு நாளிதழ் செய்தியாகவே வெளியிட்டது.
தங்கமணி மறுப்பு:
இந்த செய்திகளுக்கு தங்கமணி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார், அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் ”13.8.2025 (அன்றைய நாள்) தங்கள் நாளிதழில் முதல் பக்கத்தில் நான் எங்கள் கட்சியில் அதிருப்தியில் இருப்பதாகவும், அறிவாலயத்தில் அழைப்பு என்றும் செய்தி போட்டிருப்பது பார்த்து மிகவும் வருத்தமடைந்தேன்.
நான் தினந்தோறும் படிக்கிற பத்திரிக்கையில் முதல் பத்திரிக்கையாக படித்து வருகிற வாசகன். உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிற ஆசிரியர் மீதும், பத்திரிக்கையின் மீதும் இன்று வந்துள்ள செய்தி, அதுவும் உங்கள் பத்திரிக்கையில் வந்ததைப்பார்த்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நான் திங்கட்கிழமை காலை (11.8.2025) தொண்டையில் சிறு அறுவைசிகிச்சை செய்து மருத்துவமனையில் இருக்கும்போது இந்த செய்தி என்னை இன்னும் ரணம் அதிகமாக்கியது.
11.8.2025 காலை 6.00 மணிக்கு அறுவை சிகிச்சை என்ற போதும், ஓய்வு எடுக்காமல் கடந்த 9.8.2025, 10.8.2025 ஆகிய தேதிகளில் திருச்சியில் முகாமிட்டு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று கட்சிப்பணியாற்றியவனை பற்றி இப்படி ஒரு செய்தி வந்ததை எண்ணி மிகவும் மனவேதனைப்படுகிறேன்.
இறுதி மூச்சுவரை அதிமுக:
எனது இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக இயக்கம் தான் என் உயிர் மூச்சு. மூச்சு நின்றதற்கு பிறகு எனது உடலில் அஇஅதிமுக கொடி போர்த்தி தான் இருக்கும் என்பதையும், இது யாரோ சில அரசியல் எதிரிகளின் தவறான தகவல் தெரிவித்ததை செய்தியாக போட்டுள்ளீர்கள். இதை முழுமையாக மறுக்கிறேன்” என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
ஈபிஎஸ் உடன் ஒரே வேனில் தங்கமணி:
இந்த நிலையில் தங்கமணியின் உடல்நலம் சீரடைந்துள்ளது. அதனால் திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தில் தங்கமணி கலந்துகொண்டார். மேலும் நேற்று மணச்சநல்லூர், துறையூர், முசிறி ஆகிய தொகுதிகளுக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் தங்கமணி கலந்துகொண்டுள்ளார். தங்கமணியை பார்த்ததும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குஷியாக கையசைத்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள், இதனால் தங்கமணி திமுகவில் இணைவார் என்கிற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.






















