FIFA ARG vs AUS: ஆயிரமாவது போட்டியில் அசத்திய மெஸ்ஸி… டஃப் கொடுத்த ஆஸ்திரேலியா! போராடி வென்ற அர்ஜென்டினா!
இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றிருந்த போதிலும், ஆட்டத்தின் இறுதி தருணங்கள் அர்ஜென்டினாவிற்கு, எதிர்பார்த்ததை விட பதற்றமான நிலையே உருவானது.
கத்தாரின் தோஹாவில் உள்ள அஹ்மத் பின் அலி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற FIFA உலகக் கோப்பை தொடரின் 16வது சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
காலிறுதியில் அர்ஜென்டினா
மெஸ்ஸியின் 1000வது போட்டியில், இந்த உலகக் கோப்பையில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணி காலிறுதியில் காலெடுத்து வைக்க பெரிதும் உதவியுள்ளது. அர்ஜென்டினா ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த வாரம் நெதர்லாந்திற்கு எதிரான காலிறுதியில் விளையாட முன்னேறியுள்ளது. இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றிருந்த போதிலும், ஆட்டத்தின் இறுதி தருணங்கள் அர்ஜென்டினாவிற்கு, எதிர்பார்த்ததை விட பதற்றமான நிலையே உருவானது.
மெஸ்ஸியின் சாமர்த்தியமான கோல்
அர்ஜென்டினா அளவுக்கு பெரிய ஜாம்பவான்களை கொண்டிராத அணி, ஆஸ்திரேலிய அணியாக இருந்தாலும், அர்ஜென்டினாவின் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டனர். டிஃபன்ஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினாலும், வேகத்தை குறைத்து, வாய்ப்புகளை உருவாக்குவதில் கோட்டை விட்டனர். எப்படியோ ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு கோட்டையை உடைத்து உள்ளே நுழைந்த மெஸ்ஸி இடையே ஒட்டமெண்டியிடம் பந்தை பாஸ் செய்து குழப்ப, கிடைத்த கேப்பில் மீண்டும் மெஸ்ஸியிடம் அவர் தட்டிவிட சாமர்த்தியமாக ஒரு கோலை சேர்த்தார் மெஸ்ஸி.
அர்ஜென்டினா இரண்டாவது கோல்
ஒரு கோல் அடித்த பிறகு, அர்ஜென்டினா அப்படியே தக்கவைக்கும் மோடுக்கு சென்றதால், அணி மேலாளர் லியோனல் ஸ்கலோனி பல மாற்றங்களைச் செய்தார். அவர்கள் தொடர்ந்து மற்றொரு கோலுக்கு செல்ல வைத்தார். ஒரு குறிப்பிட்ட தருணத்தில், அவர் பந்தோடு வேகமாக முன்னேறி செல்ல, பல சவால்களை எதிர்த்து, நான்கு ஆஸி வீரர்களை ட்ரிப்பில் செய்து முன்னேறி சென்று அந்த வாய்ப்பை தவறவிட்டார். அதன் பிறகு 57வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி வீரரே கோல்கீப்பரிடம் பாஸ் செய்த பந்தை அவரை ஏமாற்றி அவரிடம் இருந்தே வாங்கிய ஆல்வரேஸ் எளிதாக ஒரு கோலை அடிக்க அர்ஜென்டினா நல்ல நிலைக்கு வந்தது.
பரபரப்பான இறுதிக்கட்டம்
எளிதாக வென்று விடலாம் என்று நினைத்த நேரத்தில்தான் அதிர்ச்சி காத்திருந்தது. போட்டியின் கடைசி கட்டத்தில் வீறு கொண்டு எழுந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அர்ஜென்டினாவுக்கு பயத்தை காட்டினர். போட்டியின் 77 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் பெர்னாண்டஸ் பாக்ஸிற்கு வெளியே இருந்து அற்புதமான ஷாட் அடிக்க கோல் போஸ்டில் சென்று விழுந்தது. இதனால் ஆட்டம் உச்சகட்ட பரபரப்புக்கு சென்றது. ஆஸ்திரேலிய அணி மேலும் ஒரு கோல் உடனே அடிக்க முன்னேறி வந்த நிலையில் ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ஒரு கோலை அர்ஜென்டினா போராடி தடுக்கவேண்டி இருந்தது. அதன் பிறகு சூடு பறக்க நடந்த ஆட்டத்தில் 7 நிமிடம் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்ட நிலையில் முழுவதும் பரபரப்பாக சென்றது. ஆனால் கோல்களை விடாமல் தடுத்ததால் இறுதியில் அர்ஜென்டினா வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவிடம் இருந்து வந்த அந்த தாமதமான எழுச்சி அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும், மேலும் அவர்கள் போட்டியின் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் பல எல்லையைத் தாண்டிச் செல்லத் தேவையான ஊக்கமும் வேகமும் போதுமானதாக இருக்காது என்று நினைக்கலாம், அடுத்தடுத்த ஆட்டங்களில் அதனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவார்கள் என்று தெரிகிறது.