Renuka Singh: இந்திய வீரர்களுக்கு சளைக்காத வீராங்கனைகள்.. ஐசிசியின் விருதை தட்டித் தூக்கிய ரேணுகா சிங்
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 2022ம் ஆண்டிற்கான, வளர்ந்து வரும் வீராங்கனை எனும் விருதை இந்தியாவின் ரேணுகா சிங் பெற்றுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது வழங்கி சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் கவுரவித்து வருகிறது. சிறந்த ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் வீரர் மற்றும் வீராங்கனை என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 2022ம் ஆண்டிற்கான விருதுகளை, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அடுத்தடுத்து அறிவித்து வருகிறது.
Impressing everybody with her magnificent displays of seam and swing bowling, the ICC Emerging Women's Cricketer of the Year had a great 2022 👌#ICCAwards2022
— ICC (@ICC) January 25, 2023
வளர்ந்து வரும் வீராங்கனை:
அந்த வரிசையில், 2022ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதுக்காக, இங்கிலாந்தின் அலிஸ் கேப்ஸி, இந்தியாவின் ரேணுகா சிங் , ஆஸ்திரேலியாவின் டார்சி பிரவுன் மற்றும் இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான யாஸ்திகா பாட்டியா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. அதன் முடிவில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீராங்கனையான ரேணுகா சிங், 2022ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இவர், 2022ம் ஆண்டிற்கான ஐசிசியின் ஒருநாள் அணியிலும் இவர் இடம்பெற்றது குறிப்பிடத்தகுந்தது.
2022ல் அசத்தல் பவுலிங்:
இந்திய அணிக்காக கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் சேர்த்து 29 போட்டிகளில் விளையாடிய, வலது கை வேகப்பந்து வீச்ச்சாளரான ரேணுகா சிங் 40 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒருநாள் போட்டிகளில் 14.88 என்ற சிறப்பான சராசரியுடன் 18 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், டி-20 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிரடியாக பந்து வீசிய ரேணுகா, வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான கோஸ்வாமி விட்டுச் சென்ற வெற்றிடத்தை, ரேணுகா சிங் நிரப்புவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஐசிசி அணிகளில் இந்தியர்கள்:
முன்னதாக, ஐசிசியின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த டி-20 வீரர் விருதை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் கைப்பற்றினார். ஒருநாள் போட்டிக்கான சிறந்த அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றனர். டி-20 தொடருக்கான அணியில் கோலி, ஹர்திக் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வாகினர். இதேபோன்று, மகளிர் பிரிவில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த அணியில் இந்திய வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர் (கேப்டன்) மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் இடம்பெற்றனர்.
ஐசிசியில் அசத்தும் இந்தியா:
இதனிடையே, ஒருநாள் தொடருக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய ஆடவர் அணி முதலிடம் பிடித்துள்ள நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் முதன்முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.