அடுத்தடுத்து தரும் தலைவலி.. மோடிக்கு வில்லனாக மாறிய ட்ரம்ப் - என்ன செய்வார் பிரதமர்?
ஆபரேஷன் சிந்தூரில் தலையீடு, ஏற்றுமதி வரி உயர்வு என அடுத்தடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மத்திய பாஜக அரசுக்கு தலைவலி அளித்து வருகிறார்.

இந்தியாவில் பாஜக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி. 2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாக பாஜக முன்னெடுத்த முகமாக திகழ்ந்தவர் பிரதமர் மோடி. தொடர்ந்து பாஜக ஆட்சியைத் தக்க வைக்க காரணமாக இருந்தவரும் மோடியே ஆவார்.
தலைவலியாக மாறிய ட்ரம்ப்:
ரஷ்யா, அமெரிக்கா, சீனா என உலகின் வலிமையான தலைவர்களை நேருக்கு நேர் அடிக்கடி சந்திக்கும் சக்தி கொண்ட தலைவராக உலா வரும் இந்திய பிரதமர் மோடிக்கு சமீபகாலமாக ட்ரம்ப் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளார். அமெரிக்க அதிபராக ஏற்கனவே ட்ரம்ப் பொறுப்பு வகித்தபோது சர்ச்சைக்குரிய பல முடிவுகளை எடுத்தார். மீண்டும் அதிபராகியுள்ள ட்ரம்ப் தற்போதும் அந்த முடிவை எடுத்து வருகிறார்.
பகல்ஹாமில் நடந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் இந்தியா நடத்தியது. இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தீவிரவாதத்திற்கு தந்த பதிலடியாக அமைந்தது. பின்னர், எல்லையில் உள்ள இரு நாட்டு மக்களின் நலன் கருதி இந்த போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த போரை தான் தலையிட்டே நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆபரேஷன் சிந்தூர்:
அமைதிக்கான நோபல் பரிசை குறிவைத்து காய் நகர்த்தி வரும் ட்ரம்ப்பின் மத்திய அரசை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், இந்தியாவின் பாதுகாப்பில் இன்னொரு நாட்டின் தலையீடும், பஞ்சாயத்தும் செய்வது அதிகார ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் மத்தியில் ஆளும் கட்சிக்கு பின்னடைவாக இருக்கும். இதன் காரணமாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் யாருடைய தலையீடும் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.
50 சதவீத ஏற்றுமதி வரி:
கடந்த அரை நூற்றாண்டுகளாக இ்ந்தியா - ரஷ்யாவுடன் நல்லுறவை கொண்டு வருகிறது. அந்த உறவை கெடுக்கும் விதமாகவும் பிரதமர் மோடி அமெரிக்க தலையீடு ஆபரேஷன் சிந்தூரில் இல்லை என்று கூறிய அடுத்த நாளே இந்தியா மீதான ஏற்றுமதி வரியை 25 சதவீதமாக விதித்தார். அதற்கு அடுத்த ஓரிரு நாட்களில் அந்த வரியை 50 சதவீதமாக ட்ரம்ப் உயர்த்தினார்.
ட்ரம்பின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தை பாதித்துள்ளது. ஏனென்றால், இந்தியாவில் இருந்து அதிகளவு ஏற்றுமதியாகும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவிற்கு மட்டும் 7.26 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி நடக்கிறது. இந்த ஏற்றுமதி வரி உயர்வால் இந்திய ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1.75 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி நடக்கிறது.
மோடிக்கு சவால்:
தமிழ்நாடு உள்பட ஒட்டுமொத்த இந்தியாவையும் ஸ்தம்பிக்க வைத்ததுடன், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரத்திலும் தலையீட்டதாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பேசி வருவதும் பிரதமர் மோடிக்கு பெரிய தலைவலியையும் பின்னடைவையையும் ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே, ட்ரம்ப் ஆட்சிப்பொறுப்பேற்றதும் அமெரிக்காவில் இருந்த இந்தியர்கள் பலரை கையில் சங்கிலி கட்டி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியதே பிரதமர் மோடி மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பேசி வருவது குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் மக்களவையில் தொடர்ந்து பேசி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் விவகாரம், ஏற்றுமதி வரி உயர்வு என அடுத்தடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மத்திய பாஜக அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் அளித்து வருகிறது. இதை பிரதமர் மோடி எப்படி சமாளிக்கப்போகிறார்? இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க அவர் என்ன செய்யப்போகிறார்? என்பது அவர் முன் உள்ள சவாலாக உள்ளது.





















