Skoda Kushaq: பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS - அப்டேட்களை அள்ளிப்போட்டு அப்க்ரேட்டில் வரும் ஸ்கோடா குஷக்
Skoda Kushaq Facelift: ஸ்கோடாவின் குஷக் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் காரானது பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS உள்ளிட்ட கூடுதல் அம்சங்களை பெற உள்ளது.

Skoda Kushaq Facelift: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக உள்ள ஸ்கோடாவின் குஷக் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் தொடர்பான பல சுவாரஸ்மான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்கோட குஷக் ஃபேஸ்லிஃப்ட்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடாவின் மிட்-சைஸ் எஸ்யுவி ஆன குஷக் கார் மாடல்,கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. விற்பனையிலும் அசத்திய குஷக், நிறுவனத்தின் சிறந்த விற்பனையாகும் மாடலாகவும் உருவெடுத்தது. ஆனால், காலப்போக்கில் போட்டியாளர்கள் அதிகரித்ததால், விற்பனை மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இந்நிலையில் தான், அறிமுகமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குஷக்கின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை ஸ்கோடா தயாரித்து வருகிறது. சாலை பரிசோதனையின் போது சிக்கிய புகைப்படங்களின் மூலம், போட்டியாளர்களுக்கு சவால் விடுக்கும் விதமாக புதிய குஷக்கில் மேம்படுத்தப்பட்ட பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரானது நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஷக் ஃபேஸ்லிஃப்ட் - பனோரமிக் சன்ரூஃப் உறுதி
காம்பேக்ட் செக்மெண்டில் உள்ள அட்டகாசமான பயண அனுபவத்தை வழங்கக் கூடிய, ஒருசில ஸ்போர்ட்டியரான கார்களில் குஷக்கும் ஒன்றாகும். ப்ரீமீயம் அம்சங்கள் நிறைந்த இந்த காரானது, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் பாதுகாப்பான எஸ்யுவிக்களில் ஒன்றாக சர்வதேச பாதுகாப்பு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், பழைய எடிஷனில் மிகவும் பிரபலமான பனோரமிக் சன்ரூஃப் இல்லாமல் இருந்தது. தற்போதைய மாடலில் சிக்னேட்சர், ஸ்போர்ட்லைன், மாண்டே கார்லோ மற்றும் ப்ரெஸ்டிஜ் ஆகிய ட்ரிம்களில் சிங்கிள் பேன் பனோரமிக் சன்ரூஃப் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
போட்டியாளர்களான ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதி க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் என அனைத்து கார்களின் டாப் வேரியண்ட்களிலும் பனோரமில் சன்ரூஃப் வசதி இருப்பது குஷக்கிற்கு பின்னடைவாக கருதப்பட்டது. அதற்கு தீர்வாக தான், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட குஷக்கின் டாப் எண்ட் வேரியண்ட்களில் பனோரமிக் சன்ரூஃப் இருப்பதை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன. இதன்மூலம் பயனர்களின் பயண அனுபவம் மேலும் மேம்பட உள்ளது.
குஷக் ஃபேஸ்லிஃப்ட் - லெவல் 2 ADAS கன்ஃபார்ம்
குஷக் ஃபேஸ்லிஃப்டில் வழங்கப்படும் மற்றொரு முக்கிய அம்சமாக லெவல் 2 ADAS கருதப்படுகிறது. எஸ்யுவி பயன்ர்கள் பலரும் அணுக விரும்பும் மற்றொரு முக்கியமான அம்சம் இதுவாகும். தற்போதைய சூழலில் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் உள்ள ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர், டாடா கர்வ் மற்றும் மஹிந்திரா BE 6 ஆகிய கார் மாடல்களில் மட்டுமே லெவல் 2 ADAS வசதி உள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப அம்சத்தால் குஷக் கார் மாடலின் பாதுகாப்பு தரம் மேலும் மேம்படுத்தப்படும்.
இதில் ஏற்கனவே எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், மல்டி கொலிசன் ப்ரேக்கிங் மற்றும் ஹோல்ட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக எலெக்ட்ரானிக் டிஃப்ரென்சியல் லாக், ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், மோடார் ஸ்லிப் ரெகுலேஷன், ப்ரேக்டிஸ்க் வைப்பிங் மற்றும் ரோல் ஓவர் ப்ரொடெக்ஷன், 6 ஏர் பேக்குகள், ஆண்டி - க்ளேர் ORVMகள், ஆட்டோ டிம்மிங் IRVM மற்றும் டையர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
குஷக் ஃபேஸ்லிஃப்ட் - 5 ஸ்டார் ரேட்டிங்
கரடுமுரடனா வலுவான கட்டமைப்பால குஷக் கார் மாடலானது, சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் ஏற்கனவே 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நடந்த சோதனையில் பெரியவர் மற்றும் குழந்தைகள் என இரண்டு பிரிவிலும் 5 ஸ்டரகளை பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான சோதனையில் 34-க்கு 29.64 மதிப்பெண்களும், குழந்தைகளுக்கான சோதனையில் 49-க்கு 42 மதிப்பெண்களையும் ஸ்கோடா பெற்றது குறிப்பிடத்தக்கது.
குஷக் ஃபேஸ்லிஃப்ட் - மற்ற அப்டேட்கள் என்ன?
குஷக்கின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் லைட்டிங் எலிமெண்ட்ஸ் மற்றும் ஃப்ரண்ட் க்ரில் பகுதிகளில் புத்துயிர் ஊட்டப்படுகிறது. கூர்மையான முன்புற பகுதி, கட்டுமஸ்தான தோற்றம் ஆகியவற்றை சோதனை புகைப்படங்கள் உணர்த்துகின்றன. பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாவிட்டாலும், புதிய அலாய் வீல்கள் இடம்பெறக்கூடும். பின்புறத்திலும் தோற்றத்தை மேம்படுத்துவதற்கான சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தில் குஷக்கில் கூடுதல் அம்சங்களுடன், புதிய தீம் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரி எதிர்பார்க்கபப்டுகிறது.
குஷக் ஃபேஸ்லிஃப்ட் - இன்ஜின், விலை விவரங்கள்
இன்ஜின் அடிப்படையில் குஷக் ஃபேஸ்லிஃப்டில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தற்போதைய எடிஷனில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷன்கள் அப்படியே பின்பற்றப்பட உள்ளது. இரண்டிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படும். இன்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் இந்த காரானது, லிட்டருக்கு சுமார் 18 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. கூடுதல் அம்சங்கள் காரணமாக புதிய குஷக் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனின் விலை, தற்போதைய மாடலை காட்டிலும் சற்றே அதிகரிக்கலாம். தற்போது அதன் விலை 10 லட்சத்து 99 ஆயிரத்தில் தொடங்கி 19 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் வரை நீள்வது குறிப்பிடத்தக்கது.





















