IND USA RUS: ”பேசி நல்ல முடிவுக்கு வாங்க ட்ரம்ப்” வாழ்த்து சொன்ன இந்தியா - ரஷ்யா சிக்கல் முடிவுக்கு வருமா?
IND USA RUS: வரிப்போருக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இடையே திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தையை இந்தியா வரவேற்றுள்ளது.

IND USA RUS: பிரதமர் மோடியின் “இது போருக்கான காலம் அல்ல” என்ற கருத்தை வெளியுறவு அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.
ட்ரம்ப் - புதின் பேச்சுவார்த்தை:
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார். அதன் முக்கிய கட்டமாக,ரஷ்ய அதிபர் புதினை வரும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று, அலாஸ்காவில் சந்தித்து பேச உள்ளதாக அறிவித்துள்ளார். இருநாட்டு தலைவர்களின் உச்சபட்ச தலைவர்களின் பேச்சுவார்த்தையை இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு சுமூகமான முடிவு கிடைக்கட்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா வரவேற்பு:
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆகஸ்ட் 15, 2025 அன்று அலாஸ்காவில் ஒரு சந்திப்புக்காக அமெரிக்காவிற்கும் ரஷ்ய கூட்டமைப்புக்கும் இடையே எட்டப்பட்ட புரிதலை இந்தியா வரவேற்கிறது. இந்த சந்திப்பு உக்ரைனில் நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அமைதிக்கான வாய்ப்புகளைத் திறப்பதற்கும் உறுதியளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி பல சந்தர்ப்பங்களில் கூறியது போல், "இது போரின் சகாப்தம் அல்ல". எனவே இந்த பேச்சுவார்த்தையை இந்தியா ஆதரிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க பயணம்:
முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவை கடந்த 2015ம் ஆண்டு நேரில் சந்தித்த பிறகு, புதின் அமெரிக்காவிற்கு பயணிப்பது இதுவே முதல்முறையாகும். இதுதொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் உக்ரைன் பிரச்னைக்கான நீண்ட கால தீர்வு தொடர்பாக விவாதிக்கப்படும். சவாலானதாக இருந்தாலும் தீவிரமாகவும், ஆற்றலுடனும் ரஷ்யா செயல்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்புக்கு நோ சொன்ன ஜெலன்ஸ்கி...
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அமைதி ஒப்பந்தம் தொடர்பான கையெழுத்தானது நில பரிமாற்ற அடிப்படையில் கூட நிகழலாம் என ட்ரம்ப் தெரிவித்தார். அதாவது, “சில நிலங்களை மீண்டும் கையகப்படுத்தலாம், சில நிலங்களை மாற்றிக்கொள்ளலாம். இருவரின் நலனுக்காகவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம்” என ட்ரம்ப் குறிப்பிட்டார். இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “அமைதிக்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு எங்களது நிலத்தை விட்டுக் கொடுக்கமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான பலன் என்ன?
பல மறைமுக காரணங்கள் இருந்தாலும், இந்தியா மீதான 50 சதவிகித வரி விதிப்புக்கு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதே காரணம் என ட்ரம்ப் கூறி வருகிறார். ஒருவேளை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தை மூலம், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வந்தால், அது இந்தியாவிற்கான நெருக்கடியை குறைக்கும். ரஷ்யாவின் போரை காரணம் காட்டி இந்தியாவின் மீது அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடும். இது, அமெரிக்க சந்தையை நம்பியுள்ள பல உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு அது பெரும் நிம்மதியை கொடுக்கும். இந்தியாவின் மீதான வரி விதிப்பு தொடர்பாக, பேச்சுவார்த்தையின் போது புதினும் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.





















