IND vs PAK: நீங்க வரலை என்றால் நாங்களும் வரமாட்டோம்.. இந்தியாவை எச்சரிக்கிறதா பாகிஸ்தான்? காரணம் என்ன?
2023 ஆம் ஆண்டு ஆடவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பரில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடர் கடந்த 16 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின்னர் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெறும். சூப்பர் 12 சுற்றில் இந்தியா அணி வரும் ஞாயிற்று கிழமை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றால் இநதியா அணி அதில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவு. ஆகவே அந்தத் தொடர் வேறு இடத்தில் நடத்தப்படும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஆசிய கோப்பை வேறு இடத்தில் நடைபெற்றால் இந்தியா பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் பிடிஐ நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள ஜெய் ஷா எப்படி இவ்வாறு கருத்துகளை கூறினார். ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாக குழு தருகிறது. ஆசிய கவுன்சிலின் தலைவர் தரவில்லை. மேலும் ஆசியாவில் கிரிக்கெட் வளர்க்கவும் மற்றும் ஒற்றுமையாக இருக்கவும் தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தொடங்கப்பட்டது. அது சரியாக நடைபெறாத பட்சத்தில் அதிலிருந்து வெளியேறவும் பாகிஸ்தான் தயங்காது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலிருந்தும் பாகிஸ்தான் விலகுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதை காட்டி இந்தியாவை பாகிஸ்தான் எச்சரிக்கை விட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியா கடைசியாக 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரில் விளையாடியது. அதன்பின்னர் இந்தியா அணி பாகிஸ்தான் செல்லவில்லை.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு மட்டும் டிக்கெட் விற்பனை உடனடியாக முழுவதும் விற்பனையாகி விட்டது.
சூப்பர் 12ல் இந்தியாவின் அட்டவணை:
23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்பேர்ன்)
27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)
30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)
2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)
6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதன்பின்னர் தகுதி சுற்றில் ஏ பிரிவில் 2 ஆவது இடம் பிடிக்கும் அணி, தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் மற்றும் தகுதிச் சுற்றில் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகளுடன் விளையாட உள்ளது. சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி போட்டிகள் வரும் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இறுதி போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.