திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி
அண்ணாமலையால் அப்செட்டில் உள்ள நயினார் நாகேந்திரன் திமுகவிற்கு செல்வதற்காக காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இது தெரிந்தவுடன் இபிஎஸ் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட் உடன் எஸ்.பி.வேலுமணி நயினாரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் நெல்லை மாவட்டத்தில் பவர்ஃபுல் நபராக வலம் வந்த நயினார் நாகேந்திரன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜக பக்கம் தாவினார். தனக்கான மரியாதையை இபிஎஸ் கொடுக்கவில்லை என்ற அதிருப்தியில் பாஜகவுக்கு சென்ற அவருக்கு, போன உடனேயே மாநில துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது மாநில தலைவராக இருந்த தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்ட போது, தலைவர் பதவிக்கு அரசியலில் முதிர்ச்சி பெற்றவரான நயினார் பெயர் அடிபட்டது. ஆனால் இறுதியில் மாநில தலைவர் ஆனார் எல்.முருகன். அப்போதே கடுப்பான நயினார் நாகேந்திரன், எல்.முருகன் மத்திய இணைமைச்சர் ஆன பிறகு, அந்த இடம் தனக்கு தான் வேண்டும் என நினைத்து காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.
ஆனால் அதிலும் ட்விஸ்ட் கொடுத்து அண்ணாமலையை தலைவர் ஆக்கியது பாஜக தலைமை. 2021 கரூரில் தோல்வியுற்ற அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி, நெல்லையில் திமுக, அதிமுகவை எதிர்த்து வெற்றி பெற்ற எனக்கு ஒன்றுமில்லையா ? என்று ஆவேசமானார் நயினார். ஆரம்பத்தில் கட்சியில் பெரும்பாலானோர் அண்ணாமலைக்கு எதிராக இருந்தாலும், நாட்கள் போக போக அண்ணாமலையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது தமிழக பாஜக.
அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் மேலிருந்து க்ரீன் சிக்னல்களாக கிடைத்துக்கொண்டிருக்க, இதற்கு மேல் தமிழக பாஜகவில் தனக்கு வளர்ச்சியிருக்காது என எண்ணினார் நயினார். இந்தநிலையில் திமுகவுக்கு சென்றுவிடலாம் என தனது ஆதரவாளர்களிடம் நயினார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 2026 தேர்தலில் சீட் வாங்கி, ஜெயித்து, மீண்டும் திமுக ஆட்சி அமையும்பட்சத்தில், அமைச்சர் ஆகிவிடலாம் என்பது அவரது இப்போதைய கணக்கு. ஏனென்றால், இப்போது திமுக அரசில் அமைச்சர்களாக இருக்கும் பலரும் நயினாரோடு அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள்.
இந்த சூழலில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது மகன் திருமண அழைப்பிதல் கொடுக்கும் சாக்கில், மீண்டும் அதிமுகவிற்கே வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். அதுவும் எடப்பாடி பழனிசாமி சொல்லியே எஸ்.பி.வேலுமணி, நயினாரை சந்தித்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லையில் இன்னும் நயினார் நாகேந்திரனுக்கான செல்வாக்கும் இருக்கும் நிலையில், அவர் பாஜகவிலேயே தொடர்வாரா, இல்லையென்றால் திமுக அல்லது அதிமுக பக்கம் சென்றுவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.