Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
புதிதாக வந்துள்ள அண்ணாமலையால் மாநிலத் தலைவர் பதவியில் சோபிக்க முடியாது என்று கணக்குப்போட்டு வைத்திருந்தவரின் கனவுகளில் டன், டன்காக மண்ணை வாரிக் கொட்டினார் அண்ணாமலை.
அதிமுக முன்னாள் அமைச்சரும் அந்த கட்சியில் நெல்லை மாவட்டத்தில் பவர்ஃபுல் நபராக வலம் வந்த நயினார் நாகேந்திரன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தனக்கான உரிய அங்கீகாரத்தை எடப்பாடி பழனிசாமி தர மறுத்ததால், அதிருப்தியில் சென்று பாஜகவில் இணைந்தார். அவர் இணைந்ததும் அவருக்கு மாநில துணைத் தலைவர் பொறுப்பு பாஜகவில் வழங்கப்பட்டது. அப்போது தமிழிசை சவுந்தரராஜன் மாநில தலைவராக இருந்தார். பின்னர், தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, மாநில தலைவர் ரேசில் தமிழக அரசியலில் முதிர்ச்சி பெற்றவராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருந்த நயினார் நாகேந்திரன் பெயர் முன்னணியில் இருந்தது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், தேசிய பட்டியலின ஆணைய தலைவராக இருந்த எல்.முருகனை, தமிழக தலைவராக அறிவித்தது பாஜக தேசியத் தலைமை. .
அதிருப்தி அடைந்த நயினார், காத்திருக்க முடிவு
இதனால் அதிருப்தி அடைந்த நயினார் நாகேந்திரன், தனக்கு மத்திய அரசின் வாரியங்களில் பொறுப்பு கேட்டு காய் நகர்த்தி வந்தார். ஆனால், அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. அதன்பிறகு, முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகும் தான் எப்படியாவது மாநிலத் தலைவராகிவிட வேண்டும் என்று டெல்லியிலேயே முகாமிட்டு காய்நகர்த்தினார் நயினார். ஆனால், சோகம். ஐபிஎஸ் பதவியை உதறித் தள்ளிவிட்டு, பாஜகவில் இணைந்த அண்ணமலைக்கு, அதிரடியாக மாநில தலைவர் பதவியை கொடுத்து பெரிய ஸ்கெட்ச் போட்டது பாஜக தேசியத் தலைமை.
அண்ணாமலையை எளிதாக எடைப்போட்ட நயினார்
அண்ணாமலை மாநில தலைவராக பதவியேற்றது நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல சீனியர்களுக்கு பிடிக்கவில்லை. 2021 கரூரில் தோல்வியுற்ற அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி, நெல்லையில் திமுக, அதிமுகவை எதிர்த்து வெற்றி பெற்ற எனக்கு ஒன்றுமில்லையா ? என்று ஆவேசமானார் நயினார். அதோடு, சீனியர்களும் இப்போது வந்தவருக்கு கட்டுப்பட்டு, அவர் சொல்வதை நாம் கேட்பதா? என்ற ரீதியில் இருந்து வந்தனர். ஆனால், அண்ணாமலையின் செயல்பாடுகள் பெரும்பாலான நபர்களை மாற்றியது. மொத்த கட்சியும் அண்ணாமலை கட்டுப்பாட்டில் வந்தது. இதில் நயினார் ஏகத்திற்கும் அப்செட். அரசியலுக்கு புதிதாக வந்துள்ள அண்ணாமலையால் மாநிலத் தலைவர் பதவியில் சோபிக்க முடியாது என்று கணக்குப்போட்டு வைத்திருந்தவரின் கனவுகளில் டன், டன்காக மண்ணை வாரிக் கொட்டினார் அண்ணாமலை. அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் மேலிருந்து க்ரீன் சிக்னல்களாக கிடைத்துக்கொண்டிருக்க, இதற்கு மேல் தமிழக பாஜகவில் தனக்கு வளர்ச்சியிருக்காது என எண்ணினார் நயினார். ஆனால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் வரை பார்ப்போம். மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்குமானால், சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது மாதிரி, நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று, மத்திய அமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவு கண்டார். ஆனால், மீண்டும் அய்யோ, பாவம் கதையாக அவர் நெல்லையில் தோல்வியை தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.
திமுக செல்ல முடிவு எடுத்தாரா நயினார் ?
மீண்டும் அதே கதை, அதே நிலை என்றிருந்த நயினார் ஆளுங்கட்சியான திமுகவிற்கு செல்லலாம் என்று முடிவு எடுத்து தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசித்து வந்ததாக கூறப்பட்டது. இப்போதே திமுகவிற்கு சென்றுவிட்டால், 2026 தேர்தலில் சீட் கேட்டு, வாங்கி, ஜெயித்து, மீண்டும் திமுக ஆட்சி அமையும்பட்சத்தில், அமைச்சர் ஆகிவிடலாம் என்பது அவரது இப்போதைய கணக்கு. ஏனென்றால், இப்போது திமுக அரசில் அமைச்சர்களாக இருக்கும் பலரும் நயினாரோடு அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள்.
கூட்டி கழிச்சு பார்த்து கணக்கு போடும் நயினார்
இந்த கணக்கையாவது உடனடியாக அமல்படுத்திவிடலாம் என்ற எண்ணத்தில் நயினார் இருந்த சூழலில்தான், இந்த தகவல் அறிந்த அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அவரது மகன் திருமண அழைப்பிதல் கொடுக்கும் சாக்கில், மீண்டும் அதிமுகவிற்கே வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். அதுவும் எடப்பாடி பழனிசாமி சொல்லியே எஸ்.பி.வேலுமணி, நயினாரை சந்தித்து இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
எங்கே செல்லும் இந்த பாதை.. ?
ஆனால், நயினார் பாஜகவிலேயே தொடருவாரா ? திமுகவிற்கு செல்வாரா? அல்லது எஸ்.பி.வேலுமணி அழைப்பை ஏற்று அதிமுகவிற்கு செல்வாரா என்பதை அவர் போடும் கணக்குதான் முடிவு செய்யும் என்றாலும் நெல்லையில் இன்னும் நயினார் நாகேந்திரனுக்கான தனிப்பட்ட செல்வாக்கு மிஞ்சமிருக்கிறது என்பது அவருக்கு வரும் அழைப்புகள் மூலம் அறியமுடிகிறது.