”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ஆட்சியமைப்பதில் தடையாக இருக்க மாட்டேன் என பாஜகவுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே.
மகாராஷ்டிட சட்டப்பேரவை தேர்தல் பாஜக, ஏக் நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா, அஜித் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ்-க்கு சாதகமாக அமைந்தது. இந்த கூட்டணி 234 தொகுதிகளில் வென்று மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக மட்டும் 132 இடங்களிலும், சிவசேனா 57 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
ஆனால் முதலமைச்சர் யார் என்பதில் இன்னும் பேச்சுவார்த்தை முடிந்தபாடில்லை. பாஜகவை சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸை முதலமைச்சராக்க அக்கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவி கொடுத்துவிட்டு, ஃபட்னாவிஸை துணை முதலமைச்சராக்கியதே பாஜகவினருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. அதனால் இந்த தடவை அதிக இடங்களில் வெற்றி பெற்று விட்டதால் முதலமைச்சர் ஃபட்னாவிஸாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
ஆனால் முதலமைச்சர் பதவியை மீண்டும் தங்களுக்கே தர வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தரப்பு கேட்டு வருவதாக பேச்சு அடிபட்டது. இந்த நிலையில், ஏக் நாத் ஷிண்டே இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், ‘கடந்த 2-4 நாட்களாக யாரோ ஒருவர் கோபமாக இருப்பதாக வதந்திகள் வெளியானது. அதை, நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள் கோபப்படுபவர்கள் அல்ல. நான் பிரதமருடன் பேசி, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் நாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்று கூறினேன். பாஜக கூட்டணிக்கு தலைவர் யார்? பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா. எனவே, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் எங்கள் முடிவில் இருந்து எந்தப் பிரச்னையும் இல்லை என்று இருவரையும் அழைத்துப் பேசினேன். நீங்கள் முடிவு எடுங்கள். அந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். முதல்வர் பதவி தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அவருக்கு சிவசேனா முழு ஆதரவு அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.