Babar Azam Wedding: திருமணத்துக்கு 7 லட்சம் மதிப்புள்ள ஷெர்வானி வாங்கிய பாபர் அசாம்.. யாரிடம் தெரியுமா?
விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், இந்தியாவில் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள சப்யசாச்சி ஷெர்வானியை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அணி இதுவரை இந்த உலகக் கோப்பையில் 7 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் நெதர்லாந்து, இலங்கை, வங்கதேச அணிகளுடன் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. ஆனால், இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டிகளின்போது பரிதாபமான தோல்வியை பெற்றது.
இந்த உலகக் கோப்பையில் தெடர் தோல்விகளை பெற்று ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது பாகிஸ்தான், அதிலும் குறிப்பாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
விரைவில் திருமணம்:
விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது திருமணத்திற்காக பாரம்பரிய இந்திய உடையான ஷெர்வானிக்கு ஏழு லட்சம் ரூபாய் வரை செலவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், வங்கதேச அணியுடனான போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. அந்த போட்டிக்கு ஒரு நாள் முன்னதாகத்தான் அவர் இந்த ஆடையை வாங்கியுள்ளார். இந்த ஆடையை பாலிவுட் பிரபலங்களின் திருமணங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக செயல்படும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் சப்யசாச்சியில் டிசைனர் ஷெர்வானியை வாங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல், ஷெர்வானியைத் தவிர, நகைகளையும் பாபர் அசாம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
திருமண ஏற்பாடு தீவிரம்:
இந்த ஆண்டு இறுதியில் பாபர் அசாம் திருமணம் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இப்போதே பாபர் அசாம் குடும்பத்தினர் திருமணத்திற்கு தேவையான பொருட்கள், ஆடைகள், மற்றும் நகைகள் வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர் என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
ரசிகர்கள் விமர்சனம்:
பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்துவரும் சூழலில் பாபர் அசாம் இந்தியாவிற்கு கிரிக்கெட் விளையாட வந்தாரா இல்லை ஆடைகள் மற்றும் நகைகள் எடுக்கவந்தாரா? என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: Afghanistan Captain: நெதர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்... ஹஷ்மத்துல்லா ஷாஹிதி நெகிழ்ச்சி பேச்சு!
மேலும் படிக்க: AFG Vs NED, Match Highlights: நெதர்லாந்தை பந்தாடி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி - புள்ளிப்பட்டியலில் டாப்-4க்கு முன்னேற்றமா?