MBBS BDS Counselling: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நீட்டிப்பு; மாணவர்களுக்கு கடைசி சான்ஸ்- முக்கிய தேதிகள் இதோ!
NEET UG Counselling 2025: எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தற்போது 16ஆம் தேதி வரை கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்களுக்கு நடத்தப்படும் கலந்தாய்வு தேதி ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரி எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் சுகாதாரத் துறையின் https:tnmedicalselection.net என்ற இணைய தள முகவரியில் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர்.
இந்த கலந்தாய்வில் இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளைத் தேர்வு செய்ய (சாய்ஸ் ஃபில்லிங்) ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 16ஆம் தேதி வரை கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
அகில இந்திய பொதுக் கலந்தாய்வின் கீழ் முதலில் 15 சதவீத மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தபிறகே மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறும்.
அகில இந்திய பொதுக் கலந்தாய்வு தாமதம் ஆகி வருவதால், மாநில அரசின் முதல் சுற்றுக் கலந்தாய்வுக்கான அவகாசம் நீட்டிக்கப்படுவதாக, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
முக்கியத் தேதிகள் என்னென்ன?
இதன்படி மாணவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 5 மணி வரை தாங்கள் விரும்பும் கல்லூரிகளைத் தேர்வு செய்து, விவரங்களைப் பூர்த்தி செய்யலாம். இவர்களுக்கான இட ஒதுக்கீடு ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும். இந்த முடிவுகள் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகும். தேர்வர்கள் தங்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணையை ஆகஸ்ட் 24ஆம் தேதி மதியம் 12 மணி வரை பெறலாம். ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலை 5 மணிக்குள், ரிப்போர்ட்டிங் செய்ய வேண்டும் எனவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://tnmedicalselection.net/






















