Vaikunda Ekadasi 2023: வைகுண்ட ஏகாதசி திருவிழா; பகல் பத்து 4 நாள் முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் பெருமாள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து 4 நாள் முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சிடளித்தார்.
![Vaikunda Ekadasi 2023: வைகுண்ட ஏகாதசி திருவிழா; பகல் பத்து 4 நாள் முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் பெருமாள் Vaikunda Ekadasi 2023 Sri rangam temple Festival Day Ten 4 Day Perumal in Pearl Slanted Garland TNN Vaikunda Ekadasi 2023: வைகுண்ட ஏகாதசி திருவிழா; பகல் பத்து 4 நாள் முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் பெருமாள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/16/bc411d4b9b672133d9eae6d2596297841702709787323571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் திருமொழி திருவிழா கடந்த புதன் கிழமை தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் அன்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார். மேலும் காலை 8 மணி முதல் உபகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினார்கள். இரவு 7 மணிக்கு அர்ஜூன மண்ட பத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பகல் பத்தின் முதல் நாள் முதல் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார்.
இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். மேலும் பகல் பத்தின் 4 நாளான இன்று கண்ணனெனும் கருந் தெய்வம்" பாசுரத்திற்கு ஏற்ப நம்பெருமாள் முத்து சாய் கிரீடம், ரத்தின காது காப்பு, ரத்தின அபயஹஸ்தம்,பங்குனி உத்திர பதக்கம், சந்திரகலா, பருத்திப்பூ பதக்கம், நகரி, ஆறு வட முத்துமாலை, காசு மாலை, அடுக்கு வைர மகர கண்டிகை பதக்கங்கள், வைர ரங்கூன் அட்டிகை உள்ளிட்ட திருவாபரணங்கள்அணிந்து பின் சேவையாக , புஜ கீர்த்தி, அண்ட பேரண்ட பக்ஷி வெண் பட்டுத்தி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நம்பெருமாள் புறப்பாடின் போது ரங்கப்பிரபு, ரெங்கநாதா என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர்.பகல் பத்து விழா நான்காம் நாளான இன்று நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பின்னர் இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சேர்கிறார்.
இதேபோல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான வருகிற 22-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 23-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 29-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 30-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான 23-ந் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. இதேபோல்ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான 29-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும், இத்துடன் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நிறைவடையும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)