Chitra Pournami 2024: அண்ணாமலைக்கு அரோகரா... கொளுத்தும் வெயிலில் காலணியின்றி கிரிவலம் வந்த பக்தர்கள்
கொளுத்தும் வெயிலை சற்றும் பொருட்படுதாமல் 14 கிலோமீட்டர் கிரிவல பாதையில் காலில் காலணியின்றி அண்ணாமலைக்கு அரோகரா பக்தி முழக்கமிட்டு கிரிவலம் சென்ற பக்தர்கள்

சித்ரா பௌர்ணமி அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கிரிவலம்
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களும் சிறப்புமிக்க மாதங்களாக கருதப்படுகிறது. அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள் அண்ணாமலையார் கோயிலில் கோலாகலமாக நடைபெறும். திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதங்களிலும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். ஆண்டிற்கு ஒருமுறை சித்திரை மாதம் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி என்பது உலக பிரசித்தி பெற்ற ஒன்று. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய 25 லட்சம் பக்தர்களை போலவே இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பௌர்ணமி நிலவில் கிரிவலம் வருவது வழக்கம்.
திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 2500 சிறப்பு பேருந்து, 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்
அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி நேற்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5:47 மணிக்கு நிறைவடைய உள்ளதாக அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து இன்று திருவண்ணாமலைக்கு வருகை தருவதால் 2500 சிறப்பு பேருந்துகளும், 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது. அதுமட்டுமின்றி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும், கிரிவலப் பாதை முழுக்க 350-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொளுத்தும் வெயிலிலும் கிரிவலம் வரும் பக்தர்கள்
கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கிரிவலப் பாதையில்105 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் நெகிழியை பயன்படுத்தாமல் வாழை இலை, பாக்கு மட்டை, மந்தார் இலை உள்ளிட்ட இலைகளை கொண்டு அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை அண்ணாமலையார் திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு உண்ணாமுலை அம்மனுடன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படும் பக்தர்கள் திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியேற்றப்பட்டனர். அதுமட்டுமின்றி கொளுத்தும் வெயிலை சற்றும் பொருட்படுத்தாத பக்தர்கள் கொளுத்தும் வெயிலிலும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் காலில் காலணியின்றி அண்ணாமலைக்கு அரோகரா பக்தி முழக்கமிட்டு கிரிவலம் மேற்கொண்டனர். மாலைக்கு மேல் சித்ரா பௌர்ணமி நிலவு வந்தவுடன் கிரிவலப் பாதையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

