ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் டக்கெட் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில் இன்று கராச்சியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சேசிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, ஆட்டத்தை பென் டக்கெட் பில் சால்ட் தொடங்கினர்.
பில் சால்ட், ஜேமி ஸ்மித் ஏமாற்றம்:
ஆட்டம் தொடங்கியது முதலே பில் சால்ட் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். ஆனால், சால்ட் 6 பந்தில் 10 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் ஜேமி ஸ்மித் 15 ரன்னில் அவுட்டானார்.
43 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த நிலையில் இங்கிலாந்திற்காக டக்கெட் - ஜேமி ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாகவும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விளாசினர். இந்த ஜோடி சிறப்பாக ஆடி இங்கிலாந்து அணியின் ரன்களை ஏற்றியது. சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் விளாசினார். டக்கெட் அதிரடியாக ஆட ஜோ ரூட் நிதானமாக ரன்களை எடுத்தார். இந்த சூழலில், இங்கிலாந்து அணி 201 ரன்களை எட்டியபோது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜோ ரூட் ஆட்டமிழந்தார்.
சதம் அடித்த டக்கெட்:
அவர் 78 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் அசத்தலாக ஆடிக்கொண்டிருந்த பென் டக்கெட் சதம் அடித்தார். ஸ்பென்சர், துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், மேக்ஸ்வெல், ஜம்பா என அனைவரது பந்துவீச்சையும் அவர் விளாசினார். 30 வயதான டக்கெட் இது 3வது ஒருநாள் போட்டி சதம் ஆகும். இவர் இதுவரை 20 ஒருநாள் போட்டிகளில் ஆடி 949 ரன்களை எடுத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள டக்கெட் 13 அரைசதங்கள், 4 சதங்களுடன் 2 ஆயிரத்து 270 ரன்கள் எடுத்துள்ளார். பென் டக்கெட்டிற்கு இதற்கு முன்பு தனது ஒருநாள் போட்டி அதிகபட்ச ரன்னாக 118 ரன்கள் இருந்தது. தற்போது இந்த போட்டியில் அதை முறியடித்துள்ளார்.
ஜோ ரூட் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரமான ஹாரி ப்ரூக் 3 ரன்னில் அவுட்டானார். தற்போது 35 ஓவர்களில் 224 ரன்களை எடுத்து இங்கிலாந்து ஆடி வருகிறது. இன்னும் 15 ஓவர்கள் இருப்பதால் இங்கிலாந்து அணி இதே வேகத்தில் ரன்கள் எடுத்தாலே 350 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்பு இருக்கிறது.
இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இங்கிலாந்து?
இங்கிலாந்து அணிக்காக களத்தில் பென் டக்கெட், ஜோஸ் பட்லர் ஆடி வரும் சூழலில், லிவிங்ஸ்டன், ப்ரைடன் கார்ஸ், ரஷீத், ஆர்ச்சர், மார்க் வுட் வெளியில் உள்ளனர். இவர்கள் அனைவருமே நன்றாக பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள் என்பதால் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு வலுவான இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்பென்சர் ஜான்சன், துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், மேக்ஸ்வெல், ஜம்பா, மேத்யூ ஷார்ட், லபுஷேனே பந்துவீசி வருகின்றனர்.

