அகத்திய முனிவர் வாரணாசியில் பிறந்துதான், தமிழகத்திற்குச் சென்றார்- பாஜக அமைச்சர் ஜெ.பி.நட்டா
தமிழகத்திலிருந்து காசிக்கு வர இயலாதவர்களுக்காக, மன்னன் அதிவீரராம பாண்டியன் தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் நிறுவினார் என மத்திய அமைச்சர் நட்டா தெரிவித்தார்.

மகாகவி பாரதியார் சில ஆண்டுகள் காசியில் வாழ்ந்த போதுதான், முறுக்கு மீசை வைத்து முண்டாசு கட்ட தொடங்கினார் என்றும் அதற்கு பிறகுதான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் போர்க்கொடி உயர்த்தினார் என்றும் பாஜக அமைச்சர் ஜெ பி நட்டா தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமம் 3.0
காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே கலாச்சாரத்தை இணைக்கும் பாலமாகவும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகவும் காசி தமிழ் சங்கமம் 3.0 வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ பி நட்டா தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்வில் பங்கேற்று பேசிய அவர், அகத்திய முனிவர் வாரணாசியில் பிறந்தவர் என்றும் இங்கிருந்துதான், அவர் தமிழகம் சென்றார் என்றும் தெரிவித்தார். இதன் அடிப்படையிலேயே இந்த ஆண்டு நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் மையப்பொருளாக அகத்திய முனிவரின் செயல்பாடுகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் சித்த மருத்துவத்தை தோற்றுவித்த அகத்திய முனிவர், தமிழ் இலக்கணத்திற்கு அவரது பங்களிப்பு அளப்பரியது என்று நட்டா கூறினார்.
செங்கோல்:
தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு செங்கோல் கொண்டு வரப்பட்டது பற்றி குறிப்பிட்ட அவர், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அதிகார மாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக அப்போதைய பிரதமர், நேருவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் அது அன்றைய பிரதமரின் ஆனந்த பவன் இல்லத்தில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
செங்கோலின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், தமிழக மக்களின்பால் உள்ள உயர்ந்த மதிப்பையும் கருத்தில் கொண்டு 75 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட செங்கோலினை புதிய நாடாளுமன்றத்தின் மையப்பகுதியில் வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதற்கு முக்கிய அங்கீகாரம் கிடைப்பதற்கு வழி வகுத்தார்.
காசி விஸ்வநாதர் ஆலயம்
தமிழகத்திலிருந்து காசிக்கு வர இயலாதவர்களுக்காக 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னன் அதிவீரராம பாண்டியன் தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலயம் நிறுவியதை அவர் சுட்டிக்காட்டினார்.மகாகவி பாரதியார் சில ஆண்டுகள் காசியில் வாழ்ந்த போதுதான், முறுக்கு மீசை வைத்து முண்டாசு கட்ட தொடங்கினார் என்றும் அதற்கு பிறகுதான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் போர்க்கொடி உயர்த்தினார் என்றும் அவர் தெரிவித்தார்.
காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பதாகவும் மத்திய அமைச்சர் நட்டா தெரிவித்தார்.
Also Read: கல்லுக்குள் ஈரம்.! ஹமாஸ் இயக்கத்தினரின் நெற்றியில் முத்தமிட்ட இஸ்ரேலிய பணயக்கைதி.! வீடியோ..





















