CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
CBSE NOC: சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க இனி மாநில அரசுகளின் அனுமதி அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

CBSE NOC: மாநில அரசுகளின் மேலும் ஒரு உரிமையை பறிக்கும் விதமாக சிபிஎஸ்இ அமைப்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ அறிவிப்பு:
வரும் 2026-27 கல்வியாண்டு முதல் இணைப்பு அங்கீகாரம் பெற மாநில அரசிடமிருந்து ஆட்சேபனையில்லாச் சான்றிதழ் (NOC) பெறுவது கட்டாயமில்லை என்று, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், “இனிமேல் வாரியத்துடன் இணைப்பு கோரும் பள்ளிகள் 2026-27 கல்வியாண்டு முதல் SARAS போர்ட்டலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆட்சேபனையில்லாச் சான்றிதழுடன் அல்லது இல்லாமல் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும்" என்று CBSE செயலாளர் ஹிமான்ஷு குப்தா வெளியிட்டுள்ள, இணைப்பு துணை விதிகள் 2018 இல் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிக்கப்பட்ட மாநில அரசின் உரிமை:
சிபிஎஸ்இ சார்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு, மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் மத்திய அரசின் மற்றொரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எமர்ஜென்சியின் போது பொது பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை, மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக்கொள்கை போன்ற அடுத்தடுத்த திட்டங்களால், மாநில அரசுகளிடம் உள்ள ஒரு சில அதிகாரத்தையும் மொத்தமாக பறிக்கும் விதமாக மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
முற்றும் மத்திய - தமிழக அரசு மோதல்:
சிபிஎஸ்இ நிர்வாகத்தின் முடிவு மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே மற்றொரு மோதல் புள்ளியாக மாறக்கூடும். காரணம் இது மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி CBSE பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை பயிற்றுவிக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது. புதிய கல்விக்கொள்கை மூலம், இந்திய திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது, திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், எந்தவொரு மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை எனவும், மத்திய அரசு திட்டங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதி வழங்கமுடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதனால், திமுக மற்றும் பாஜக இடையே கடும் கருத்து மோதல் நிலவி வருகிறது.
இத்தகைய நிலையில் தான், சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க இனி மாநில அரசுகளின் தடையில்லா சான்றிதழ் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், மாநிலத்தில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய கல்விக்கொள்கை மூலம், மாணவர்கள் மூன்று மொழி கற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

