(Source: Poll of Polls)
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம்...புதினை விமர்சித்த ஆவணப்படம்.. ஆஸ்கர் வென்றது..
இந்த ஆவணப்படம், புதினை கடுமையாக விமர்சித்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷியாவின் முக்கிய எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
உலக சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச விருதாக கருதப்படுவது ஆஸ்கர் என்று அழைக்கப்படும் அகாடமி விருதுகள். அந்த வகையில், 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.
அதில், சிறந்த பாடல் பிரிவில் இந்திய திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கும் ஆவண குறும்பட பிரிவில் தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட The Elephant Whisperers படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. இது இந்தியர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவல்னி ஆவணப்படம்:
அதேபோல, சிறந்த ஆவணப்பட பிரிவில் நவல்னி ஆவணப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இந்த ஆவணப்படம், ரஷியா அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷியாவின் முக்கிய எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
கனடா நாட்டின் இயக்குநரான டேனியல் ரோஹர் இயக்கிய இந்த இந்த ஆவணப்படம், அரசியல் ரீதியாக நவல்னி எப்படி உச்சம் தொட்டார் என்பதை பற்றியும் விவரிக்கிறது. ரஷிய அதிபர் புதினை கடுமையாக எதிர்த்து வந்த அவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு செர்பியாவுக்கு சென்றபோது நோவிச்சோக் என்ற விஷம் கொடுக்கப்பட்டது.
புதினின் சதியை அம்பலப்படுத்திய ஆவணப்படம்:
பின்னர், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த அனைத்து சம்பவங்களையும் விவரிக்கும் படமாக நவல்னி ஆவணப்படம் அமைந்துள்ளது.
இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது அளிக்கப்பட்ட பிறகு விழாவில் பேசிய இயக்குநர் ரோஹர், "இன்றிரவு இங்கே எங்களுடன் இருக்க முடியாத ஒரு நபர் இருக்கிறார். ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி. குரல் கொடுத்ததற்காக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய வார்த்தைகளை நம் அனைவருக்கும் சென்று சேர்வதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். உக்ரைன் மீது நியாயமற்ற போரை புதின் தொடுத்து வருகிறார் என நவல்னி குரல் கொடுத்திருந்தார்" என்றார்.
ஆஸ்கர் மேடையை தெறிக்கவிட்ட நவல்னியின் மனைவி:
ஆஸ்கர் விழா மேடையில் பேசிய நவல்னியின் மனைவி ஜூலியா நவல்னயா, "உண்மையைச் சொன்னதற்காகத்தான் என் கணவர் சிறையில் இருக்கிறார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் என் கணவர் சிறையில் இருக்கிறார்" என்றார்.
46 வயதான நவல்னி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாஸ்கோவில் இருந்து 250 கீமி தொலைவில் உள்ள உச்சபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையில் மோசடி குற்றத்தின் பேரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சன்டான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கடந்த மாதம் BAFTA விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.