Afghan Crisis update: ‛நான் தான் அடுத்த ஆஃப்கன் அதிபர்’ துணை அதிபர் அறிவிப்பு: கோபத்தின் உச்சத்தில் தலிபான்கள்!
‛‛நான் நாட்டிற்குள்தான் இருக்கிறேன் என்னும் நிலையில் அடுத்த அதிபர் நான்தான். இதற்காக அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுகோர உள்ளேன்’’ -துணை அதிபர் அமருல்லா சலேஹ்
ஆஃப்கானின் அடுத்த அதிபர் தான்தான் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அந்த நாட்டுத் துணை அதிபர் அமருல்லா சலேஹ். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைநகர் காபுலைக் கைப்பற்றியதை அடுத்து அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஹெலிகாப்டர் நிறைய பணக்கட்டுகளுடன் ஒமானுக்குத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் முல்லா ஒமரின் ஆதரவாளரான தலிபானின் முல்லா அப்துர் பர்தார் அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என செய்தி வெளியானது.
இதற்கிடையேதான் தற்போது அந்த நாட்டின் துணை அதிபர் அமருல்லா சலேஹ் தன்னை அடுத்த அதிபராகப் பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில் ‘ஆஃப்கானின் அரசியல் சாசனத்தின்படி அதிபர் இல்லாத சமயத்திலோ அல்லது அவர் தப்பியோடிவிட்டாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ, இறந்தாலோ அந்தச் சூழலில் அதிபருக்கான பொறுப்பை துணை அதிபர்தான் ஏற்பார். நான் நாட்டிற்குள்தான் இருக்கிறேன் என்னும் நிலையில் அடுத்த அதிபர் நான்தான். இதற்காக அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுகோர உள்ளேன்’ எனப் பதிவிட்டுள்ளார். மேலும் தலிபான் தீவிரவாதத்துக்கு தான் என்றுமே தலைவணங்கப்போவதில்லை எனவும் தன்னை நம்பியவரை என்றுமே காட்டிக்கொடுக்கப்போவதில்லை என்றும் தலிபான்களுடன் ஒரே கூரையின் கீழ் இருப்பது சாத்தியமே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Clarity: As per d constitution of Afg, in absence, escape, resignation or death of the President the FVP becomes the caretaker President. I am currently inside my country & am the legitimate care taker President. Am reaching out to all leaders to secure their support & consensus.
— Amrullah Saleh (@AmrullahSaleh2) August 17, 2021
முன்னதாக, ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியது முதல் தலிபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்தில் பல நகரங்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சியை எடுத்தனர். அதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக கந்தஹார் நகரத்தை தலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து 15ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் தலிபான் கொண்டு வந்தது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பினார். தற்போது ஆஃப்கான் தலிபானின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
இந்நிலையில் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல்லா முஜாஹித் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்க தலிபான் உறுதிபூண்டுள்ளது. பெண்களுக்குத் தேவையான சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் பெண்கள் வேலை செய்யலாம். பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது. காபூலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. அனைத்து தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என மற்ற நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
முன்னதாக தலிபான் கட்டுப்பாட்டில் ஆஃப்கான் வந்துள்ளதால் பெண்களுக்கான உரிமைகள் பெருமளவில் பறிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தலிபான் குறித்து பேசிய ஆஃப்கன் பெண் இயக்குநர் சாஹ்ரா கரிமி, 20 வருடங்களாக எங்கள் இளம் தலைமுறை பெற்ற ஆதாயங்கள் அனைத்தும் காணாமல் போகும். மீண்டும் ஆஃப்கான் இருண்ட காலத்துக்கு செல்லும். தலிபான் கலைகளை தடை செய்வார்கள். அவர்கள் கொலை செய்ய வேண்டிய பட்டியலில் நானும் மற்ற இயக்குநர்களும் இருப்பார்கள். உரிமைகளை பறிப்பார்கள். இருளில் தள்ளுவார்கள். வீட்டுக்குள் அடைக்கப்படுவோம். குரல் நெறிக்கப்படும். எங்கள் பள்ளிகள் நாசம் செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
Also Read: அடுத்த ஆஃப்கன் அதிபர்... டீசல் விலை குறைவு..டி20 அப்டேட்...இன்னும் பல!