கார்த்திகை தீபம் : விழுப்புரத்தில் பல வடிவங்களில் விற்பனைக்கு வரும் அகல் விளக்கு
விழுப்புரம்: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தண்ணீரில் எரியும் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பல வண்ணங்களிலும் பல வடிவங்களிலும் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாகியுள்ளது . இந்த வருடம் புதுப்புது வடிவங்களில் மக்களுக்கு பிடித்தவாறு விளக்குகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருநாள் வருகிற 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் பொதுமக்கள் தங்களது வீடு, கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். களி மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளே இதற்கு அதிகம் பயன்படுத்துவார்கள்.
இதற்காக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி கிராமத்தில் கலைமகள் சுடுமண் சிற்ப குழு மற்றும் தென்னமாதேவி மகளிர் சுய உதவி குழு இணைந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 60 பெண்கள் கார்த்திகை தீபத்திற்கு தேவையான அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் கார்த்திகை தீப அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 5 ஸ்டார் ,7 ஸ்டார் அகல்விளக்குகள், ஒன் ஸ்டெப் அகல் விளக்குகள், 2 ஸ்டெப் அகல் விளக்குகள்,
கலசத் டோர் அகல் விளக்கு, தாமரைப்பூ விளக்குகள், நெய் விளக்கு, வீடு டூம் அகல்விளக்கு, ஹாங்கிங் தூம் அகல் விளக்குகள், மாய விளக்குகள், யானை விளக்குகள், தட்டு விளக்குகள், தண்ணீரில் எரியும் விளக்குகள் போன்ற பல வகைகளில் பல வண்ணங்களில் அகல்விளக்குகள் தயாரித்து வருகின்றனர் தொழிலாளர்கள். அகல் விளக்குகள் ஒரு ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யபடுகிறது. இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் தமிழ்நாடு மற்றும் கேரளா, பாண்டிச்சேரி, ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
புதிய முயற்சி :
இந்த வருட புதிய வரவாக மாய விளக்குகள் மற்றும் தண்ணீரில் எரியும் விளக்குகள் இருக்கிறது. மாய விளக்கு என்பது மற்ற விளக்குகளை விட வித்தியாசமாக இருக்கிறது. மற்ற விளக்குகளில் நேராக எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். மாய விளக்குகளில் விளக்கை தலைகீழாக வைத்து அதில் உள்ள துளை வழியாக எண்ணெய் ஊற்றி பின் நேராக மாற்ற வேண்டும். விளக்கின் மேல் உள்ள துளை வழியாக திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
மாய விளக்குகள் பார்ப்பதற்கு மற்ற விளக்குகளை விட வித்யாசமாகவும் அழகாகவும் பல டிசைன்களிலும் இருப்பதால் பொதுமக்களுக்கு பிடித்துப் போகிறது என விளக்கு செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மாய விளக்கு 150 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அகல் விளக்கு வடிவில் உள்ள பிளாஸ்டிக் விளக்குகளில் எண்ணெய் ஊற்றுவதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றினால் லைட் எரியும். இந்த பிளாஸ்டிக் அகல் விளக்கும் தற்போது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு விளக்கு ரூபாய் 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் விளக்குகள் இருப்பதால் அதை வாங்கிக் கொண்டு செல்வதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் வாடிக்கையாளர்கள்மற்றும் பொதுமக்கள்.