புடவை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப் - டிப்டாப் பி.டெக் பட்டதாரி பெண்ணை கேட்ச் செய்த போலீஸ்
’’கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட லாஸ்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் 15 பவுன் நகைளை திருடியதும் தெரியவந்தது’’
புதுச்சேரி ஜவுளிக்கடையில் துணிகளை வாங்கி கொண்டு பணம் கொடுக்காமல் தப்பி சென்ற பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது. புதுச்சேரி குண்டுபாளையம், ரத்னா நகர் பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம் (55). வழுதாவூர் சாலை காந்திநகரில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி இவரது கடைக்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் டிப்டாப் உடையணிந்து வந்தார்.
பின்னர் அவர் கடையில் 8 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள் உள்பட பல்வேறு ஆடைகளை வாங்கினார். இதற்கான பணத்தை செல்போன் செயலி மூலம் செலுத்துவதாக தெரிவித்தார். அப்போது தனது செல்போனில் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்று கூறி அவர் கடைக்குள் அங்கும், இங்குமாக நடந்து கொண்டிருந்தார். கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தணிகாசலம் அடுத்த வாடிக்கையாளர்களை கவனிப்பதில் மும்முரமாக இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த பெண் நைசாக துணிகளுடன் கடையில் இருந்து வெளியேறினார்.
சிறிது நேரத்தில் அந்த பெண் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தணிகாசலம், இதுதொடர்பாக கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் போலீசார் கடையில் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண்ணின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது.
விசாரணையில் அந்த பெண் புதுவை கதிர்காமம் அனந்தா நகர் புகழேந்தி வீதியை சேர்ந்த கோபிநாதன் என்பவரது மனைவி பி.டெக். பட்டதாரியான அனுசியா (29) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கோரிமேடு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் வெளியானது.
அதாவது அந்த பெண், செஞ்சி, விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் உள்ள ஜவுளி, மளிகை கடை, அரிசி கடைகளில் துணிகள் மற்றும் பொருட்களை வாங்கிவிட்டு நூதன முறையில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட லாஸ்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் 15 பவுன் நகைளை திருடியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 விலை உயர்ந்த சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்