TVK Vijay: விஜய்யுடன் கூட்டணி வைங்க.. தமிழக காங்கிரசிடம் அடம்பிடிக்கும் கேரள காங்கிரஸ் - இதான் விஷயமா?
தமிழ்நாட்டில் விஜய்யுடன் கூட்டணி வைக்க தமிழக காங்கிரஸ் கட்சியினரை கேரள காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவ்வப்போது மட்டும் பரபரப்பை உண்டாக்கி வந்த விஜய், அடுத்த 10 மாதங்களில் சுற்றுப்பயணம், மக்கள் சந்திப்பு ஆகியவற்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
கேரள அரசியலில் எதிரொலிக்கும் விஜய் செல்வாக்கு:
விஜய்க்கு என்று தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடக என இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, மலையாள சூப்பர்ஸ்டார்களுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளம் விஜய்க்கு கேரளாவில் உண்டு. விஜய் நடத்திய விக்கிரவாண்டி மாநாட்டிற்கு கூட கேரளாவில் இருந்து ரசிகர்கள் வந்தனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் சமயத்தில்தான் கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் ஆளுங்கட்சியாக உள்ள மார்க்சிஸ்ட் கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
தற்போதைய ஆட்சியில் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வரும் நிலையில், கேரளாவில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு பிரகாசம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
கூட்டணி வைக்கத் துடிக்கும் கேரள காங்கிரஸ்:
கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதலமைச்சர் தேர்வில் முதலில் இருப்பவர் வேணுகோபால். இவர் தமிழ்நாட்டில் தமிழக காங்கிரஸ் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்காக ஓரிரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோருடன் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் நடத்திய சந்திப்பிற்கு அடித்தளமே இந்த வேணுகோபால்தான் என்று தெரிய வந்துள்ளது.
வேணுகோபால் ஸ்கெட்ச்:
ஏனென்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் - தவெக கூட்டணி வைத்தால் விஜய்யின் செல்வாக்கை கேரள காங்கிரசிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேணுகோபால் திட்டமிட்டு வருகிறார். கேரளாவில் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். காங்கிரஸ் - விஜய் கூட்டணி அமைந்தால் கேரள விஜய் ரசிகர்கள் வாக்குகள் தங்களுக்கே ஓட்டுகளாக விழும் என்று வேணுகோபால் நம்பிக்கையுடன் உள்ளார்.

இதற்காகவே அவர் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ்நாட்டிலும் இதனால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று வேணுகோபால் கருதுகிறார்.
வேணுகோபாலின் இந்த முயற்சிக்கு தமிழக காங்கிரசில் சிலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரள காங்கிரசின் யுக்தி தமிழ்நாட்டில் எடுபடுமா? சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு பக்கபலமாக நிற்கப்போகும் கட்சி எது? என்பது அடுத்தடுத்த மாதங்களில் தெரிய வரும்.




















