ராமதாஸ் அதிரடி! பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் - அன்புமணிக்கு எதிராக புதிய வியூகம்?
பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகின்ற 17 ஆம் தேதிபுதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் நடைபெறுகிறது.

விழுப்புரம்: பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகின்ற 17 ஆம் தேதிபுதுச்சேரி அருகேயுள்ள பட்டானூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் மருத்துவர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்குமான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமகவின் பொதுக் குழு கூட்டத்தில் தனது மகள் வழி பேரனான முகுந்தனை பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்ததால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ராமதாசுடன், அவரது மகன் அன்புமணி பொதுக் குழு மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அன்று முதல் இருவருக்குமான மோதல் போக்கு இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு அவரை செயல் தலைவராக நியமித்தத்தோடு மட்டுமல்லாமல் இனிமேல் நான் தான் பாமகவிற்கு தலைவராக இருப்பேன் என்றும் ராமதாஸ் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பாமகவில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி விட்டு தனது ஆதரவாளர்களை நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து பாமகவின் தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் தான் இயங்கும் என்றும் நான் தான் தலைவர் எனக் கூறி வரும் அன்புமணியின் பேச்சை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்றும் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாமகவின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் வரும் 17ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பட்டானூரில் நடைபெறும் என பாமக அறிவித்துள்ளது. காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேருர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என டாக்டர். ராமதாஸ் தலைமையில் இயங்கி வரும் பாமக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டாக்டர். ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் சிறப்பு பொதுக் குழு கூட்டத்தை டாக்டர்.ராமதாஸ் கூட்டியிருப்பதால் அக்கட்சி வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















