எங்களுக்கு எதுக்குங்க அபராதம்... குமுறும் கொள்முதல் நிலைய பணியாளர்கள்
இது தொடர்பாக 13 மண்டலங்களிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட அலுவலர்களைக் கொண்ட சிறப்புக் ஆய்வுக் குழுக்களைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நியமித்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் எடை குறைவுக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் பணியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்பு குழுவினர் எடை குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் நெல் சாகுபடிதான் முக்கியமானதாகும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொண்டு வருகின்றனர்.
கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது கோடை சாகுபடி அறுவடைப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சில மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் கொள்முதல் பணிகளில் இயல்புக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக 13 மண்டலங்களிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட அலுவலர்களைக் கொண்ட சிறப்புக் ஆய்வுக் குழுக்களைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நியமித்தது.
இக்குழுவினர் 13 மண்டலங்களில் ஜூலை 30, 31 ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு, மன்னார்சமுத்திரம், கண்டமங்கலம் ஆகிய நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்ற சிறப்பு ஆய்வுக் குழுவினர், அங்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் தரம்,, எடை குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதில், தரமும், எடையும் குறைவாக இருப்பதாகக் கூறி ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர். மேலும், தொடர்புடைய பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்துள்ளனர். இதனால், நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நெல் கொள்முதல் நிலைய பருவ கால பணியாளர்கள் கூறியதாவது: லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. ஆனால், ஆய்வுக்கு வந்த அலுவலர்கள் தரம், எடை குறைந்துள்ளதாகவும், விதிகளுக்கு ஒவ்வாத காரணங்களைக் கூறியும் அபராதம் விதித்துள்ளனர். ஆண்டுக்கு 6 மாதங்களே பருவ கால பணியாளர்கள் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆய்வுக்கு வரும் ஒவ்வொரு அலுவலரும் பருவ கால பணியாளர்களை வஞ்சிக்கும் வகையில் அபராதம் விதிப்பதால், மிகுந்த வேதனையாக உள்ளது என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், எடை குறைவு பிரச்சினை குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.





















