வளரத்துடிக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் முதலீடு செய்ய வாருங்கள் - அமைச்சர் பொன்முடி அழைப்பு
வளர்ச்சி மிகுந்த தமிழ்நாட்டில் வளரத்துடிக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என அமைச்சர் பொன்முடி பேச்சு
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர், விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் முயற்சியினால் 48 நிறுவனங்கள் ரூ.1020.39 கோடி முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இம்முதலீடுகளால் 3,902 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும் என பேச்சு
அமைச்சர் பொன்முடி மற்றும் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தொழில் மையம் சார்பில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 முன்னிட்டு, நடைபெற்ற விழுப்புரம் மாவட்ட பெருந்திரள் கூட்டத்தில், தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக்கொண்டு, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு இன்று வழங்கினார்கள்.
அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு தொழில்துறையில் சிறந்து விளங்க வேண்டும் எனவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் துவங்கிட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தொழில்நிறுவன முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட அழைப்பு விடுத்தார்.
அதனடிப்படையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024, சனவரி 7 மற்றும் 8-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதன் மூலம், பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்துவங்கிட வழிவகை ஏற்படும். இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுவதோடு, தமிழ்நாடு பொருளாதார முன்னேற்றத்தில் சிறந்து விளங்கிடும். பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஈர்த்து ஊக்குவிக்கும் நிகழ்வாக உலக முதலீட்டாளர் மாநாடு கருதப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரத்தை எட்டுவதை நோக்கிய தமிழ்நாடு அரசின் தளர்வறியாப் பயணத்தில் முக்கிய படிநிலை இந்த உலக முதலீட்டாளர் மாநாடு 2024 ஆகும்.
உலக முதலீட்டாளர் மாநாட்டை ஒட்டி 750 கோடி ரூபாய்க்கான தொழில்சார் முதலீட்டை ஈர்ப்பதென விழுப்புரம் மாவட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு விஞ்சப்பட்டுள்ளது. 48 நிறுவனங்கள் ரூ.1020.39 கோடி முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இம்முதலீடுகளால் 3,902 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும். தொழில்முனைவோரை முதலீடு செய்ய அழைப்பதோடு தமிழ்நாடு அரசு நின்று விட வில்லை. தொழில்வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. நீங்கள் தொழில்நடத்தத் தேவையான சட்ட ரீதியான உரிமங்கள் பெறும் நடவடிக்கையை எளிமைப்படுத்தி அனைத்து நடைமுறைகளையும் இணையமுறையில் வெளிப்படையாக்கியுள்ளது.
உங்களை ஊக்குவிக்க முதலீட்டு மானியம், மின் கட்டண மானியம், தரச் சான்றிதழ் மானியம் எனப் பல்வேறு மானியங்களையும் வழங்குகிறது. இந்திய அளவில் தொழில் புரிவதற்கான மிகச் சிறந்த சூழலமைப்பு மற்றும் பாதுகாப்பு கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. நமது விழுப்புரம் மாவட்டம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தமைந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள தொழில்வளர்ச்சிப் பூரித நிலையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு சாதகமான சூழலமைவைக் கொண்டுள்ளது. ஏற்றுமதி முனையமான சென்னையை எளிதில் அணுகுவதற்கான சாலை இணைப்பைக் கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில், தொழிற்சாலைகளுக்குத் தேவையான இடவசதியும் உள்ளது.
வெண்மணியாத்தூர், பட்டணம் சிட்கோ தொழிற்பேட்டைகளுடன் சிப்காட் தொழில் வளாகமும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவல்லாமல் சிப்காட் சார்பாக திண்டிவனத்தில் உணவுத் தொழிற்பூங்கா, சிட்கோ சார்பில் மருந்துத் தொழிற்பேட்டையும் அமைக்கப்படவுள்ளது. இந்த மாவட்டத்தின் வேளாண் விளைச்சல் மற்றும் கடல் உயிர் வளத்தைக் கொண்டு உணவுப் பதப்படுத்துதல் தொழில் பெருக வாய்ப்புண்டு. இங்கே பல காலமாக செழித்து நடைபெறும் களிமண் சிற்பவமுருவாக்கல், மண்பாண்ட வளைதல், தங்க நகை செய்தல் ஆகிய தொழில்களையும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தலாம். சென்னையை ஒட்டிய பகுதிகளிலமைந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு ஒரிஜினல் உதிரி பாகங்கள் செய்து வழங்கும் எஞ்சினியரிங் தொழில்சாலைகளும் அமைக்க வாய்ப்புண்டு.
பெருந்திரள் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள தொழில் முனைவோர்க்கு நான் வழங்கும் உறுதிமொழி இதுதான், நீங்கள் தொழில் தொடங்க, அதனைத் தொய்வின்றி வெற்றிகரமாக நடத்த உங்களுக்கான அனைத்து ஆதரவுகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கவும், உங்களோடு துணை நிற்க, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஆயத்தமாக உள்ளன. வளர்ச்சி மிகுந்த தமிழ்நாட்டில் வளரத்துடிக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.