தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் 20% கூடுதலாக விற்பனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் மனோதங்கராஜ்
ஆவின் பொருட்கள் தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 20 சதவிகிதம் கூடுதலாக விற்பனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் மனோதங்கராஜ்
விழுப்புரம்: திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து 7 சதவிகிதம் ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளதாகவும், தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டினை விட இந்தாண்டு 20 சதவிகிதம் கூடுதலாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியிலுள்ள ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் திமுக எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் அமைச்சர் தலைமையில் துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோதங்கராஜ், தமிழகத்தை பொறுத்தவரை கால்நடை வளர்ப்பு பால் உற்பத்தி என்பது நிலையான தொழிலாக இருந்து வருவதாகவும் படித்த இளைஞர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட அரசு சார்பில் ஊக்கதொகை வழங்கி ஊக்குவிக்க தயாராக உள்ளதால் இளைஞர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்தினார்.
ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் நெய் அதிகளவில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து 7 சதவிகிதம் ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளதாகவும், தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டினை விட இந்தாண்டு 20 சதவிகிதம் கூடுதலாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்டர் வாயிலாக, மற்ற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படும் பால் அளவு குறித்தும், மாவட்டத்தில் செயல்படும் பால் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களிடமிருந்து பெறப்படம் பால் கொள்முதல் செய்யப்படும் அளவு, தயாரிக்கப்படும் பால் வகைகளின் எண்ணிக்கை மற்றும் அளவுகள், பால் குளிரூட்டும் மையங்களின் எண்ணிக்கை, பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து விழுப்புரம் பால்பண்ணை மற்றும் மொத்த குளிரூட்டும் மையங்கள் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக செயல்படும் 18 பால் சேகரிப்பு வழித்தடங்களின் விவரம், விழுப்புரம் பால் பண்ணையிலிருந்து நுகர்வோர்கட்கு பால் விநியோகம் செய்ய ஏதுவாக பால் பாக்கெட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படும் 21 வழித்தடங்களின் விவரம் குறித்து விரிவாக கேட்டறியப்பட்டது.
மேலும், பால் உற்பத்தியை பெருக்க கறவை மாட்டு கடன் திட்டம், கிசான் கிரெடிட் கார்ட் திட்டம், கால் நடை தீவனம், நுண்தாது உப்பு கலவை, நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடம், அண்ணா நலநிதி திட்டம், கால்நடை காப்பீட்டு திட்டம், பால் பகுப்பாய்வு கருவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கம், ஒன்றிய பயிற்சி நிலையம், வெளிமாநில பால் பண்ணை சுற்றுப்பயண மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி போன்ற திட்டங்களின் வாயிலாக பயன்பெற்றவர்களின் விவரம் மற்றும் திட்டங்களின்
செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் விரிவாக கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பால்வளம் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சார்பில், 03 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டதற்கான பதிவு சான்றிதழும், 03 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கலைத்தல் சங்கங்களிலிருந்து மீட்சி செய்யப்பட்டவர்களுக்கு மீட்சி ஆணையும், புதியதாக பதிவு செய்யப்பட்ட 05 சங்கங்களுக்கு பால் கேன்களும், 05 சங்கங்களுக்கு பால் பகுப்பாய்வு கருவிகளும், 05 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு தீவனப்புல் விதைகளும், 5 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.5.0 இலட்சம் மதிப்பிலான கறவை மாட்டு கடனுதவியும், கூட்டுறவு சங்கத்தின் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.28,000 வீதம் ரூ.1,68,000 மதிப்பில் கறவை மாட்டு கடனுதவியும், 08 பயனாளிகளுக்கு தலா ரூ.45,000 வீதம் ரூ.3,60,000 மதிப்பிட்டில் கறவை மாட்டு கடனுதவியும், 01 பயனாளிக்கு ரூ.2,70,000 கறவை மாட்டு கடனுதவி என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.12,98,000 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக, பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட ஆவின் நிறுவனத்தில், மாவட்டத்திலுள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு பால் சார்ந்த உணவுப்பொருட்களான, ஆவின் பால், தயிர், மோர், நெய், குல்பி, ஐஸ்கிரிம் மற்றும் பால்கோவா போன்ற பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், பால் பதனிடும் அறை, குல்பி, பால்கோவா மற்றும் ஐஸ்கிரிம் தயாரிக்கும் அறை, ஆவின் பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் பகுதி போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஆவின் நிறுனத்தினால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் அதிகப்படியான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்கள் என்பதால் சுகாதாரமான முறையில் பொருட்கள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்வதுடன், இயந்திரங்களை அவ்வப்பொழுது தூய்மையாக பராமரித்திட வேண்டும் எனவும், சுகாதாரமான முறையில் பொருட்கள் தயாரிப்பதற்கு ஏதுவாக, பணியாளர்களுக்கு தேவையான கையுறை, தலையுறை போன்றவற்றினை வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.